சூழ்நிலை மாறும், கவலை வேண்டாம்: காஷ்மீரில் ஆறுதல் கூறிய ராகுல்
சூழ்நிலை மாறும், கவலை வேண்டாம்: காஷ்மீரில் ஆறுதல் கூறிய ராகுல்
சூழ்நிலை மாறும், கவலை வேண்டாம்: காஷ்மீரில் ஆறுதல் கூறிய ராகுல்
UPDATED : மே 24, 2025 05:53 PM
ADDED : மே 24, 2025 05:50 PM

ஜம்மு: காஷ்மீர் சென்ற ராகுல், பாகிஸ்தான் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, கவலை வேண்டாம் சூழ்நிலை மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த 8 மற்றும் 10 ம் தேதிகளில் ஜம்மு காஷ்மீரில் எல்லையோரங்களில் பொது மக்கள் வசித்த பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், பள்ளி கட்டடங்கள், வீடுகள், குருத்வாரா உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சென்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்த பகுதிகளை சென்று பார்வையிட்டார். அங்கு, பூஞ்ச் மாவட்டத்திற்கு சென்ற அவர், வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து சேதம் அடைந்த பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: இப்போது, நீங்கள் ஆபத்தையும், கொஞ்சம் பயமுறுத்தும் சூழ்நிலையை பார்த்து உள்ளீர்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம். சூழ்நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த பிரச்னைகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதம், படிப்பதும், விளையாடுவதும், ஏராளமான நண்பர்களை சேர்ப்பதும் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, குருத்வாராவிற்கும் சென்று அவர் பார்வையிட்டார்.
இந்த பயணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களை நான் சந்தித்தேன். உடைந்த வீடுகள், சிதறிய உடைமைகள் , ஈரமான கண்கள் மற்றும் ஒவ்வொரு மூலையிலும் அன்புக்குரியவர்களை இழந்த வேதனையான கதைகள்- இந்த தேசபக்தி கொண்ட குடும்பங்கள் ஒவ்வொரு முறையும் தைரியத்துடனும் கண்ணியத்துடனும் போரின் மிகப்பெரிய சுமையைத் தாங்குகின்றன. அவர்களின் துணிச்சலுக்கு வணக்கம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நான் ஆதரவாக உள்ளேன். அவர்களின் கோரிக்கைகளை தேசிய அளவில் எழுப்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.