Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'அரசியலமைப்பை மதிக்க வேண்டும்': ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

'அரசியலமைப்பை மதிக்க வேண்டும்': ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

'அரசியலமைப்பை மதிக்க வேண்டும்': ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

'அரசியலமைப்பை மதிக்க வேண்டும்': ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

ADDED : ஜூன் 27, 2025 04:01 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது அதனை மனதார மதிக்க வேண்டும்' என காங்கிரஸ் எம்பி ராகுலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சாடியுள்ளார்.

எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசுபவர்கள் அதன் உணர்வை காக்க தவறிவிட்டனர். எமர்ஜென்சிக்கு இன்னும் மன்னிப்பு கேட்காதவர்களிடம், அரசியலமைப்பு சட்டம் பற்றி நீங்கள் என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது. அதை மனதார மதிக்க வேண்டும்.

நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே முன்னாள் பிரதமர் இந்திரா எமர்ஜென்சியை பிறப்பித்தார். 1975ம் ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது நான் ஒரு மாணவனாக இருந்தேன். என்ன நடந்தது, எல்லோரும் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அப்போது நான் கற்றுக்கொண்ட பாடம், சுதந்திரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பது தான்.

எமர்ஜென்சியின் போது, ​​அரசியலமைப்பு 5 முறை திருத்தப்பட்டது. அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எமர்ஜென்சி கொண்டு வந்ததற்காக இந்திரா குடும்பத்தினர் ஒருபோதும் வருத்தம் தெரிவித்ததில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அதை எதிர்த்தனர். இது, ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us