கிராமங்களை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
கிராமங்களை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
கிராமங்களை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 26, 2025 01:47 AM
விக்ரம் நகர்:தேசிய தலைநகரில் உள்ள கிராமங்களுக்கு 1,000 கோடியில் 430 உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில கிராமப்புற மேம்பாட்டு வாரியம் நேற்று அனுமதி வழங்கியது .
தேசிய தலைநகரில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு அமைந்த பிறகு தேசிய தலைநகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களை மேம்படுத்த கிராமப்புற மேம்பாட்டு வாரியம் புதிதாக உருவாக்கப்பட்டது.
இந்த வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
தேசிய தலைநகரின் கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களுக்கு இணையான மேம்பாடு இருக்க வேண்டும். இதற்கு இந்த அரசு முன்னுரிமை வழங்கும்.
கிராமங்கள், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் சின்னங்கள் மட்டுமல்ல; டில்லியின் உயிர்நாடியும் கூட. கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதும் எங்கள் அரசாங்கத்தின் குறிக்கோள்.
தேசிய தலைநகரின் 30 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் முதற்கட்டமாக 430 பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாரியத்தின் முதல் கூட்டத்திலேயே உட்கட்டமைப்புகளை மேற்கொள்ள 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, இந்த கிராமங்களில் சாலைகள், வடிகால்கள், குளங்கள், சமூக மையங்கள், பூங்காக்கள், தகன மைதானங்கள், விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
இந்த பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் கபில் மிஸ்ரா, வாரியத் தலைவர் ராஜ்குமார் சவுகான், துணைத் தலைவர் கஜேந்திர சிங் தரல் மற்றும் பல எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.