ஹிமாச்சலுக்கு ரூ.1,500 கோடி; பஞ்சாபுக்கு கூடுதலாக ரூ.1,600 கோடி: வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிரதமர் அறிவிப்பு
ஹிமாச்சலுக்கு ரூ.1,500 கோடி; பஞ்சாபுக்கு கூடுதலாக ரூ.1,600 கோடி: வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிரதமர் அறிவிப்பு
ஹிமாச்சலுக்கு ரூ.1,500 கோடி; பஞ்சாபுக்கு கூடுதலாக ரூ.1,600 கோடி: வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிரதமர் அறிவிப்பு
ADDED : செப் 10, 2025 06:35 AM

சிம்லா: ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, “ஹிமாச்சலுக்கு 1,500 கோடி ரூபாயும், பஞ்சாபிற்கு கூடுதலாக 1,600 கோடி ரூபாயும் வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்,” என அறிவித்தார்.
வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் பறந்தபடி நேற்று பார்வையிட்டார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பை சந்தித்த ஹிமாச்சலில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவித்தார்.
முதலில், ஹெலிகாப்டர் மூலம் ஹிமாச்சல் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, பின்னர், காங்ராவில் தரையிறங்கி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லா, பா.ஜ., தலைவர்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, “வெள்ளத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை விரைவாக சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என உறுதி அளித்த பிரதமர், நிவாரண உதவிக்காக உடனடியாக 1,500 கோடி ரூபாய் விடுவிப்பதாக தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும், பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
*கூடுதலா ரூ.1,600 கோடி
'பஞ்சாப் மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக, 12,000 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ள சேதங்களை நேற்று பார்வையிட்ட பிரதமர் மோடி, “கூடுதலாக, 1,600 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும்,” என, அறிவித்தார்.
மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் ஆய்வுக்குப் பின் குருதாஸ்பூரில் தரையிறங்கிய பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரையும் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, வேளாண் அமைச்சர் குர்மீத் சிங், மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.