பயங்கரவாத நடவடிக்கைக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ.,
பயங்கரவாத நடவடிக்கைக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ.,
பயங்கரவாத நடவடிக்கைக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ.,
ADDED : செப் 04, 2025 02:25 AM

புதுடில்லி: லஷ்கர் - இ - தொய்பாவின் துணை பயங்கரவாத அமைப்பான, டி.ஆர்.எப்., எனப்படும், 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' மலேஷியா வழியாக, ஹவாலா மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் திரட்டியதற்கான ஆதாரங்களை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ம் தேதி ஹிந்து சுற்றுலா பயணியரை குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர்.
தொடர்பு இல்லை
இதற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் நம் ராணுவம் பதிலடி கொடுத்தது.
ஆரம்பத்தில் இந்த தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. பின்னர், இதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என கூறியது. கடந்த, 2019ல் ஹிஸ்புல் முஜாக்தீன் பயங்கரவாத அமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் டி.ஆர்.எப்., அமைப்பு.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை தடுக்கும், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு லஷ்கருக்கு வரும் நன்கொடைகளை தீவிரமாக கண்காணித்தது.
இதனால், நிதி திரட்டும் பணி பாதிப்படைவதை தடுக்கும் வகையிலும், ஜம்மு - காஷ்மீரில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தவும் டி.ஆர்.எப்., என்ற பயங்கரவாத துணை அமைப்பை லஷ்கர் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தான் அரசும் உறுதுணையாக இருந்தது.
இந்நிலையில், டி.ஆர்.எப்., பயங்கரவாத அமைப்புக்கு வரும் நிதி தொடர்பான விசாரணையில், என்.ஐ.ஏ., இறங்கியது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து, அவரது மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்களை என்.ஐ.ஏ., ஆராய்ந்தது.
ரூ.9 லட்சம் வரை நிதி சுமார், 450 தொடர்பு எண்கள் இருந்த நிலையில், அதில் உள்ள ஒரு நபரின் வாயிலாக டி.ஆர்.எப்.,புக்கு நிதி சென்றது கண்டறியப்பட்டது. மேலும், சில தொடர்பு எண்கள் பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர்களின் எண்கள் என்பதும் தெரிந்தது.
இதனால், என்.ஐ.ஏ., விசாரணையை தீவிரப்படுத்தியது. அதில், பயங்கரவாத அமைப்புகளுக்காக திரட்டப்பட்ட நிதி மலேஷியா வழியாக ஹவாலா பணமாக மாற்றப்பட்டு டி.ஆர்.எப்.,புக்கு கைமாறியிருக்கலாம் என தெரிந்தது.
அதை உறுதி செய்வது போல, மலேஷியாவை சேர்ந்த அகமது மிர் என்பவருடன், ஜம்மு - காஷ்மீரில் இருந்த யாசிர் ஹயாத் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தான் அடிக்கடி மலேஷியாவுக்கு சென்று, மிர் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக 9 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டியிருக்கிறார்.
பின்னர் அந்த பணத்தை டி.ஆர்.எப்., பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரான ஷபாத் வானி என்பவரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
நாடகம் அம்பலம்
மேலும், நிதியை திரட்ட, வானியும் பல முறை மலேஷியாவுக்கு சென்று திரும்பிய தகவலும் என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மலேஷியாவில் இருக்கும் மிர் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இருக்கும் இரு முக்கிய நபர்களிடமும் ஹயாத் தொடர்பில் இருந்ததையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் டி.ஆர்.எப்., அமைப்பை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததால், லஷ்கர் மற்றும் பாகிஸ்தானின் நாடகம் அம்பலமாகி உள்ளது.