சித்தராமையா கோரிக்கை: அசிம் பிரேம்ஜி நிராகரிப்பு
சித்தராமையா கோரிக்கை: அசிம் பிரேம்ஜி நிராகரிப்பு
சித்தராமையா கோரிக்கை: அசிம் பிரேம்ஜி நிராகரிப்பு
ADDED : செப் 26, 2025 12:57 AM

பெங்களூரு: 'விப்ரோ' நிறுவன வளாகம் வழியாக, வாகனங்கள் செல்ல அனுமதி கேட்ட கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையாவின் கோரிக்கையை, அசிம் பிரேம்ஜி நிராகரித்து விட்டார்.
பெங்களூரு நகரின் வெளிவட்ட சாலையில், இப்பலுார் சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'விப்ரோ' வளாகம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கேட்டு, 'விப்ரோ' நிறுவனர் அசிம் பிரேம்ஜிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து, முதல்வருக்கு அசிம் பிரேம்ஜி அனுப்பியுள்ள கடிதம்:
எங்கள் நிறுவன வளாகம் வழியாக, வாகனங்களை அனுமதிக்க நீங்கள் கோரிக்கை விடுத்து உள்ளீர்கள். ஆனால், எங்கள் வளாகத்திற்குள் செல்லும் சாலை, பொது பயன்பாட்டிற்கானது இல்லை. வரையறுக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்பாட்டில் உள்ளது.
எங்கள் வளாகம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் சிறப்பு பொருளாதார மண்டலமாகவும் உள்ளது.
இதனால், தனியார் சொத்து வழியாக பொது வாகன பயன்பாட்டை அனுமதிப்பது, நீண்ட கால, நிலையான தீர்வாக இருக்காது. இருப்பினும் போக்குவரத்து சவால் களுக்கு தீர்வு காண, கர்நாடக அரசுடன் கூட்டு சேர நாங்கள் உறுதி பூண்டு உள்ளோம். கூட்டு சார்ந்த அணுகுமுறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறோம்.
போக்குவரத்து பிரச்னைக்கு அறிவியல் ஆய்வுகள் மூலம், நீண்டகால திட்டத்தை வகுப்பது அவசியம். ரேஷ்மி சங்கர் தலைமையிலான எங்கள் குழுவினர், அரசு அதிகாரிகளுடன் விரைவில் விவாதிப்பர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.