ஜி.எஸ்.டி.,யில் மாநிலங்களுக்கு 75 சதவீத பங்கு மத்திய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை
ஜி.எஸ்.டி.,யில் மாநிலங்களுக்கு 75 சதவீத பங்கு மத்திய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை
ஜி.எஸ்.டி.,யில் மாநிலங்களுக்கு 75 சதவீத பங்கு மத்திய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை
ADDED : செப் 13, 2025 12:51 AM

பெங்களூரு:“மாநிலங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., பங்கை, 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்,” என, மத்திய அரசுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நாட்கள் நடக்கும், 11வது சி.பி.ஏ., என்ற, காமன்வெல்த் பார்லிமென்டரி கூட்டமைப்பு மாநாடு நேற்று முன்தினம் பெங்களூரில் துவங்கியது.
இரண்டாவது நாளாக நேற்று, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் நடந்த மாநாட்டில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
கையேந்தும் நிலை மத்தியில் ஜி.எஸ்.டி., சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்ட போது, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 'ஜி.எஸ்.டி., மாநில அரசின் உரிமைகளை பறிக்கும்; மத்திய அரசிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு செல்லும்' என, கருத்து தெரிவித்திருந்தார்.
அவரே பிரதமராக பதவியேற்ற பின் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி., முறையில், கடந்த எட்டு ஆண்டுகளாக நான்கு அடுக்குகளாக வரி விதிப்புகள் இருந்தன. தற்போது, இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டு உள்ளது.
தண்டல்காரர்கள் ஜி.எஸ்.டி.,யை வசூல் செய்யும் தண்டல்காரர்களாக மட்டுமே மாநில அரசுகளை, மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மாநிலங்களுக்கு முழுமையாக நிதி சுயாட்சி வழங்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி., பங்கை, 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
இதன் மூலம் மாநில மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கூடுதல் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் ஓரிரு நாட்களில் கிடைக்கிறது. ஆனால், தமிழக சட்டசபையில் ஒப்புதல் பெறப்படும் மசோதாக்கள், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஆண்டுக்கணக்கில் காத்து இருக்கின்றன.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சிம்லா, மும்பை, பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாடுகளில் அழுத்தம், திருத்தமாக வலியுறுத்தினேன்.
இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.