ஜெகன்னாதர் ரதத்திற்கு 'சுகோய்' விமான டயர்
ஜெகன்னாதர் ரதத்திற்கு 'சுகோய்' விமான டயர்
ஜெகன்னாதர் ரதத்திற்கு 'சுகோய்' விமான டயர்

கொல்கட்டா : மேற்கு வங்கத்தில், 'இஸ்கான்' அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஜெகன்னாதர் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் பிரமாண்ட ரதத்திற்கு, 20 ஆண்டுகள் தேடுதலுக்குபின் 'சுகோய்' போர் விமானத்தின் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
'இஸ்கான்' எனப்படும், கிருஷ்ணர் வழிபாட்டுக்கான சர்வதேச சங்கத்தின் பிரிவு, மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் இயங்கி வருகிறது.
கண்டறியும் பணி
கடந்த 1972ம் ஆண்டு முதல் இந்த இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஜெகன்னாதர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
இதில், ஜெகன்னாதர் பவனி வரும் பிரமாண்ட ரதத்திற்கு, 'போயிங் - 747 ஜம்போ ஜெட்' விமானங்களுக்கு பயன்படுத்தும் டயர்கள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
இது, கடந்த 2005ல் தேய்ந்து போனதை அடுத்து, ரதத்தின் எடையை தாங்கக்கூடிய வலிமை மிகுந்த டயர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. 20 ஆண்டுகள் தேடலுக்கு பின், எம்.ஆர்.எப்., நிறுவனம், 'சுகோய்' போர் விமானங்களுக்காக தயாரிக்கும் டயர்கள், இந்த ரதத்திற்கு சமீபத்தில் பொருத்தப்பட்டன.
18 டன் எடை
இது குறித்து இஸ்கான் கொல்கட்டா பிரிவின் செய்தித்தொடர்பாளர் ராதாராமன் தாஸ் கூறுகையில், ''பிரமாண்ட ரதம், 9 டன் எடை உடையது. யாத்திரையின் போது ரதத்தில் அமர்ந்திருப்போர் எடைகளையும் சேர்த்து மொத்தம், 18 டன் எடையை தாங்கக் கூடிய டயர்கள் தேவைப்பட்டன.
''எம்.ஆர்.எப்., நிறுவனத்திடம் இருந்து 1.80 லட்சம் ரூபாய் செலவில் நான்கு டயர்கள் வாங்கினோம். புதிய டயர்களுடன், ஜெகன்னாதர் ரதம் 24 கி.மீ., துாரம் சோதனை ஓட்டமாக சென்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது,” என்றார்.