பானு முஷ்டாக்கிற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
பானு முஷ்டாக்கிற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
பானு முஷ்டாக்கிற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : செப் 20, 2025 02:29 AM

மைசூரு தசராவை 'புக்கர் பரிசு' பெற்ற எழுத்தாளர் பானு முஷ்டாக் துவங்கி வைக்க எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மைசூரு தசரா வரும் 22ம் தேதி துவங்குகிறது. எழுத்தாளர் பானு முஷ்டாக் துவங்கி வைப்பார் என்று அரசு அறிவித்தது.
எதிர்ப்பு கன்னட தாய் புவனேஸ்வரி பற்றி சர்ச்சை கருத்து கூறியிருந்ததால், பானு முஷ்டாக் தசராவை துவக்கி வைக்க பா.ஜ., எதிர்ப்புத் தெரிவித்தது.
அரசின் முடிவுக்கு எதிராக மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் த மனு தள்ளுபடி ஆனது.
இதை எதிர்த்து, பெங்களூரை சேர்ந்த கவுரவ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், ''மைசூரு சாமுண்டீஸ்வரியை வழிபட்டு தசராவை துவங்கி வைக்க, ஹிந்து அல்லாத ஒருவரை அரசு அனுமதித்துள்ளது. இது மரபுகளுக்கு எதிரானது. கோவிலுக்குள் பூஜை செய்வது மத செயல். மதச்சார்பற்ற செயல் இல்லை. பூஜை செய்வது சடங்கின் ஒரு பகுதி.
''எங்கள் மதத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டவரை, தசராவை துவக்கி வைக்க எப்படி அனுமதிக்க முடியும்? ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் நபருக்கு அழைப்பு விடுப்பதை ஏற்க முடியாது,'' என்றார்.
அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
அரசு விழா மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டு அதிர்ச்சி அடை ந்த நீதிபதிகள், வழக்கறிஞர் சுரேஷை பார்த்து, 'இந்திய அரசியலமைப்பின் முகவுரை மதச்சார்பற்ற என்பதை எடுத்துச் சொல் கிறது. தசரா அரசு விழா.
'யாரை அழைப்பது என்று முடிவு செய்வது அரசு. ஜாதியை வைத்து எப்படி பாகுபாடு பார்க்க முடியும்? 2017 தசராவுக்கு நிசார் அகமதுவை அழைத்தபோது யாரும் பிரச்னை செய்யவில்லை. இப்போது மட்டும் ஏன் பிரச்னை வருகிறது?' என்று கேள்வி எழுப்பினர்.
பின், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- நமது நிருபர் -