திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாத விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாத விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாத விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நமது நிருபர்
புதுடில்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இப்போது வரை சுப்ரீம் கோர்ட்டில் பட்டியலிடப்படவில்லை. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வாய்மொழியாக தமிழக அரசு தரப்பில் குறிப்பிட்டதை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஏற்க மறுத்து விட்டார். 'வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரட்டும்' என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ''கடந்த, 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்னை. கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை.
'குறிப்பிட்ட இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்' என, 2014ல் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. அதை தான் அரசு தரப்பில் பின்பற்றி உள்ளோம். புதிதாக தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமார் கேட்கும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 15 மீட்டர் தொலைவில் உள்ளது. தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, அங்கு தீபம் ஏற்ற அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது'' என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த வழக்கை இன்று (டிச.,05) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி முன்னிலையில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல் கூறுகையில், ''மாநில அரசு நாடகம் நடத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் கூறுவதற்காகவே இங்கு வந்துள்ளனர்,'' என்றார். தமிழக அரசு தரப்பு வக்கீல், ''எங்கள் வழக்கை பட்டியலிட வேண்டும்,'' என்று கோரினார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''இப்படி வாய்மொழியாக வழக்கை விசாரிக்கும்படி கேட்கக்கூடாது,'' என்றார். கடந்த வாரத்தில் தான், வாய்மொழியாக வழக்கை விசாரிக்க கேட்கக்கூடாது என்று அனைவருக்கும் தலைமை நீதிபதி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
மிகவும் அவசரமான சூழல் இருந்தால் தவிர, வாய்மொழியாக வழக்கை பட்டியலிட கேட்கக்கூடாது என்று தலைமை நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
கேவியட் மனு
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


