Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் போஸ்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் போஸ்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் போஸ்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் போஸ்

Latest Tamil News
கோல்கட்டா: ''மேற்கு வங்கத்தில் குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். மென்மையான போக்கையே அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை,'' என, அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், ஒடிஷாவைச் சேர்ந்த மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சர்ச்சை

கடந்த 10ம் தேதி இரவு, ஆண் நண்பருடன் அவர் வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை கடத்தி சென்று மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்படி, அவரது ஆண் நண்பர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூனில், கொல்கட்டாவில் சட்டக் கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. துர்காபூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, 'இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல வேண்டாம்' என கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தொடர்ச்சியான பலாத்கார சம்பவங்கள், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் அளித்த பேட்டி:மேற்கு வங்கத்தில் குண்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். அவர்கள் மென்மையான போக்கையே கடைப்பிடிப்பதால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குண்டர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மாநிலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாலியல் குற்றங்களை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது. இச்சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

முதன்மை கடமை

பெண்கள் எந்த நேரத்திலும், எந்த நாளிலும் வெளியே சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையில், மேற்கு வங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும். துர்காபூர் சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநிலத்தில் அரசு மாறும். ஆனால், சட்டம் - ஒழுங்கில் சமரசம் செய்யவே கூடாது. சட்டம்- - ஒழுங்கை பேணுவதே போலீசாரின் முதன்மை கடமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மேற்கு வங்க காவல் துறையில் உள்ள ஒரு பிரிவினர், ஊழல் நிறைந்தவர்களாகவும், அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவும் உள்ளனர். இந்த அதிகாரிகளை அகற்ற வேண்டும். இது, ஆளும் அரசின் பொறுப்பு. காவல் துறை நடுநிலையுடன் இருக்க வேண்டும். ஆளுங்கட்சியின் குரலாக இருக்கக் கூடாது.

இந்நாட்டில் அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது. இதை, நம் அரசியலமைப்பு உறுதி செய்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் குற்றங்களால், இந்த உரிமை பாதுகாக்கப்படவில்லை. இது தனிப்பட்ட பாதுகாப்புக்கு மட்டுமல்ல; அரசியலமைப்பிற்கே அச்சுறுத்தல்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us