Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு

இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு

இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு

இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு

UPDATED : ஜூன் 10, 2025 01:32 PMADDED : ஜூன் 10, 2025 09:05 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக, வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்ட நிலையில் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார். பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள அவர், இந்தியா வந்தால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது நிறுவனங்கள் சார்பில் பெறப்பட்ட கடனுக்காக, உத்தரவாதமாக தரப்பட்டிருந்த அவரது சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் அவர் பெற்றிருந்த கடன் தொகையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் லண்டனில் சமீபத்தில் பேட்டி அளித்த விஜய் மல்லையா, பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

தான் வங்கிகளுக்கு 6200 கோடி ரூபாய்க்கு மட்டுமே கடன் உத்திரவாதம் கொடுத்திருந்ததாகவும், இதற்காக தன்னிடம் இருந்து வங்கிகள் 14 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். கடன் வசூல் தீர்ப்பாயத்தின் உத்தரவை இதற்கு ஆதாரமாக விஜய் மல்லையா காட்டினார். வங்கிகள் தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஊடகங்களில் வெளியான செய்திகள் தந்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் வங்கிகள் தரப்பில் விஜய் மல்லையா குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.டி.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றில் விஜய் மல்லையா பெற்றுள்ள கடன் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 17,781 கோடி ரூபாயாக உள்ளது. இந்த கடன் தொகையில், அவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதன் மூலம் 10,933 கோடி ரூபாய் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 6,997 கோடி ரூபாய் கடன் தொகை விஜய் மல்லையாவிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே கடன் தொகையை காட்டிலும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு விட்டதாக மல்லையா கூறுவது தவறு என்று வங்கியில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு கடனும் முழுவதுமாக திருப்பி செலுத்தப்படும் வரை, வட்டி செலுத்தியாக வேண்டும்; அபராத வட்டியும் செலுத்த வேண்டி இருக்கும்; இதன் அடிப்படையில் இன்னும் விஜய் மல்லையா கடன் பாக்கி வைத்துள்ளவர் தான் என்று வங்கிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us