கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் மழை: காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் மழை: காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் மழை: காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
UPDATED : ஜூன் 28, 2024 05:54 PM
ADDED : ஜூன் 28, 2024 12:05 PM

பெங்களூரு: கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் இன்றும்( ஜூன்28) கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால், கேஆர்எஸ், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சில நாட்களாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, மலை பிரதேசங்களான சிக்கமகளூரு, குடகு, ஹாசன், ஷிவமொகா, மைசூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் இந்த பகுதிகளில் கனமழை பெய்கிறது.
குடகில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் இறங்கக் கூடாது, கால்நடைகளை ஆற்றில் குளிப்பாட்டக் கூடாது என ஆற்றங்கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கேஆர்எஸ் அணைக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 478 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த இரண்டு அணைகளுக்கும் அதிக தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது.