பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது யுபிஎஸ்சி: இனிமேல் தேர்வு எழுத தடை
பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது யுபிஎஸ்சி: இனிமேல் தேர்வு எழுத தடை
பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது யுபிஎஸ்சி: இனிமேல் தேர்வு எழுத தடை
UPDATED : ஜூலை 31, 2024 05:39 PM
ADDED : ஜூலை 31, 2024 05:09 PM

புதுடில்லி: பந்தா அதிகாரி பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்த யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், இனி ஆணையம் நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க அவருக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சலுகைகளை பெற உடல் ஊனக் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.
யுபிஎஸ்சி விதிமுறைகளுக்கு மாறாக, அடையாளத்தை மறைத்து அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பூஜா கேத்கர் தேர்வு எழுதியதாகவும் அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின. இதனையடுத்து அவரது பயிற்சி ரத்து செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது யுபிஎஸ்சி.
இதற்கு கடந்த 25ம் தேதி விளக்கம் அளித்த பூஜா கேத்கர், ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரினார். இதனை யுபிஎஸ்சி நிராகரித்து விட்டது.
இதனையடுத்து யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; பூஜா கேத்கர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை அவர் அளித்த ஆவணங்களை தீவிரமாக ஆராய்ந்ததில் பூஜா கேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெளிவாகி உள்ளது. எனவே அவரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் யுபிஎஸ்சி நடத்தும் எந்தவொரு தேர்வையும் எழுத அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.