பஹல்காம் சென்ற பெண்களுக்கு வீரம் இல்லை: பா.ஜ., எம்.பி., பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
பஹல்காம் சென்ற பெண்களுக்கு வீரம் இல்லை: பா.ஜ., எம்.பி., பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
பஹல்காம் சென்ற பெண்களுக்கு வீரம் இல்லை: பா.ஜ., எம்.பி., பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ADDED : மே 25, 2025 11:39 PM

புதுடில்லி: ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணியரில் ஆண்களை மட்டும் குறி வைத்து பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது, பெண்கள் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதற்கு, நம் ராணுவம் 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., ராம் சந்தர் ஜங்ராவும், சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பிவானியில், மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
அதில், ராம் சந்தர் ஜங்ரா பேசுகையில், ''பஹல்காமில் பயங்கரவாதிகளால் கணவர்களை இழந்த பெண்களிடம், வீரம் மிகுந்த குணங்கள், வைராக்கியம் இல்லை. அவர்களின் குங்குமத்தை பயங்கரவாதிகள் பறித்தபோது, வீரம் இல்லாமல் கைகளை கட்டிக் கொண்டு இருந்து விட்டனர்.
''இதனால் அவர்களது தோட்டாக்களுக்கு இரையாகி விட்டனர். அக்னி வீர் திட்டத்தை போல, சுற்றுலா பயணியரும் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் நான்கு பயங்கர வாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது.
''நம் பெண்கள் சண்டையிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், உயிரிழப்புகள் குறைந்திருக்கும்,'' என்றார்.
பா.ஜ., -- எம்.பி.,யின் கருத்துக்கு, காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சர்ச்சை பேச்சு குறித்து ராம் சந்தர் ஜங்ராவிடம் கேட்டபோது, ''மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு பெண்; ஜான்ஸி ராணி லட்சுமிபாயும் அப்படித்தான்; அவர்கள் சண்டையிடவில்லையா? அவர்கள் போலவே, நம் சகோதரிகளும் தைரியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,'' என விளக்கம் அளித்தார்.