ஓணம் பண்டிகை: ஈரோடு ஜவுளிக்கு கிராக்கி
ஓணம் பண்டிகை: ஈரோடு ஜவுளிக்கு கிராக்கி
ஓணம் பண்டிகை: ஈரோடு ஜவுளிக்கு கிராக்கி
ADDED : ஆக 02, 2010 12:51 AM
ஈரோடு: கேரளா ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் ஓணம் ஜவுளி அனுப்புவது அதிகரித்துள்ளது.
நூல் விலை உயர்வால் உற்பத்தி குறைந்து, விற்பனைக்கு ஏற்ப துணி இல்லை என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள், வடமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேரளாவில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் பாரம்பரியமாக அணியும் செட் முண்டு, பட்டு ஜரிகை சேலை, அங்கவஸ்திரம், மஞ்சள் கரை போட்ட வேட்டி, துண்டு போன்ற ரக ஜவுளி உற்பத்தி, ஈரோட்டில் மும்முரமாக நடக்கிறது. ஈரோடு மாவட்ட அளவில் உற்பத்தியான ஓணம் ஜவுளி ரகங்கள், ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே நூல் விலை கடுமையாக உயர்ந்தது. கட்டு ஒன்றுக்கு 150 முதல் 300 ரூபாய் வரை ரகத்துக்கு தகுந்த மாதிரி விலை உயர் வடைந்தது. நூல் விலையை கண்டித்து விசைத்தறி நெசவாளர்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நூல் விலை உயர்வால், ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பு வைக்கப்பட்டிருந்த துணிகள் முழுமையாக விற்பனையாகின்றன. சென்றாண்டை விட நடப்பாண்டு ஓணம்பண்டிகையை முன்னிட்டு ஜவுளி விற்பனை அதிகரித்துள்ளதால், தற்போது உற்பத்தி செய்யப்படும் துணிகள் உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஆண்டு, ரோஜா பூ வாசனையுடன் கூடிய செட் முண்டு தயார் செய்யப் பட்டது. நடப்பாண்டு, 'இரும்பு பார்டர்' என்ற ரக செட் முண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஜவுளி வியாபாரி சாமிநாதன் கூறியதாவது: ஓணம் பண்டிகை நெருங்குவதால், ஈரோடு மார்க்கெட்டில் இருந்து சிங்கிள் செட் முண்டு, டபுள் செட் முண்டு, சுரிதார், ஜெர்ரி பாவாடை, கேரள ரக பட்டு ஜரிகை சேலை, ஜெர்ரி எம்பிராய்டரி துணி ஆகியவை அதிக அளவில் கேரளாவுக்கு அனுப்பப் படுகிறது. சென்றாண்டை விட விற்பனை அதிகரித்துள்ளது.
நடப்பாண்டில் நூல் விலை உயர்ந்ததால் உற்பத்தி குறைந்தது. விற்பனைக்கு தேவையான அளவு துணி இல்லை. உற்பத்தி செய்யும் துணிகள் உடனுக்குடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சிங்கிள் செட் முண்டு 210 ரூபாய், டபுள் செட் முண்டு 550 ரூபாய், சுரிதார் 200 முதல் 310 ரூபாய், ஜெர்ரி பாவாடை 175 முதல் 275 ரூபாய், சேலை 150 முதல் 1,700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு சாமிநாதன் கூறினார்.