"கரகரப்பிரியா' ராகத்தால் அற்புதம் நிகழ்த்திய நித்யஸ்ரீ
"கரகரப்பிரியா' ராகத்தால் அற்புதம் நிகழ்த்திய நித்யஸ்ரீ
"கரகரப்பிரியா' ராகத்தால் அற்புதம் நிகழ்த்திய நித்யஸ்ரீ
ADDED : ஆக 02, 2010 12:52 AM

மதுரை: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப் 41 வது ஆண்டு விழாவையொட்டி, மதுரையில் நேற்று துவங்கிய கர்நாடக இசைவிழாவில் நித்யஸ்ரீ மகாதேவன் 'கரகரப்பிரியா' ராகத்தில் ஆலாபனை செய்து பாடினார்.
இவர், இசை மேதை டி.கே.பட்டம்மாள் மற்றும் மிருதங்க மேதை பாலக்காடு டி.எஸ்.மணி அய்யரின் பேத்தி. பாட்டி மற்றும் தாய் லலிதாவிடம் இசை பயின்றவர். நேற்று மாலை நித்யஸ்ரீ, 'சுருட்டி' ராக வர்ணத்துடன் கச்சேரியை துவக்கினார். பின், தியாகராஜரின் 'மனஸாயெடுலோதுனே' பாடலை 'மலயமாருத' ராகம், ரூபக தாளத்தில் பாடினார். 'கலிலோ ராஜஸ தாமஸ' என்ற இடத்தில் நிரவல் செய்து, ஸ்வரம் பாடிய விதம் அழகு. 'சுனாத வினோதினி' ராகத்தை விரிவாக ஆலாபனை செய்து பாடி, ரசிகர் களின் பாராட்டை பெற்றார். மைசூர் வாசுதேவாச்சார் இயற்றிய 'தேவாதி தேவா ஸ்ரீ வாசுதேவா' ஆதி தாள சாகித்தியத்தை வழங்கி ஸ்வரம் பாடியது நேர்த்தியாக இருந்தது. கோடீஸ்வரய்யரின் 'பிலஹரி' ராகத்தில் அமைந்த 'நீ வா, சரவண பவா' தமிழ் பாடலை வழங்கி, தீட்சிதரின் 'மாமவ மீனாட்சி' வராளி ராகம், மிஸ்ர சாப்பு தாளம் பாடி, பிரதானமாக 'கரகரப்பிரியா' ராகத்தில் அற்புதமாக ஆலாபனை செய்து பாடினார். தியாகராஜரின் 'ராமா நீயெட' ஆதி தாள சாகித்தியத்தை வழங்கி, கல்பனா ஸ்வரம் பாடியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. வயலின்- ஹேமலதா, மிருதங்கம்- சிவகுமார், ராஜகணேஷ்-கஞ்சிரா, முகர்சிங்- தீனதயாளன் நேர்த்தியாக வாசித்து கச்சேரியை சிறப்பித்தனர். இன்று சந்தான
கோபாலன், நாளை மல்லாடி சகோதரர்கள், ஆக.,4 ல் சுதா ரகுநாதன், ஆக.,5 ல் சஞ்சய் சுப்பிர மணியன் பாடுகின்றனர்.