ரயிலில் இட வசதிக்காக போலி பெயர்களில் "இ-கியூ' மோசடி; பிடிக்கிறது "பறக்கும்படை'.
ரயிலில் இட வசதிக்காக போலி பெயர்களில் "இ-கியூ' மோசடி; பிடிக்கிறது "பறக்கும்படை'.
ரயிலில் இட வசதிக்காக போலி பெயர்களில் "இ-கியூ' மோசடி; பிடிக்கிறது "பறக்கும்படை'.
ADDED : ஆக 02, 2010 12:50 AM
மதுரை: ரயிலில் இடவசதிக்காக போலி பெயர்களில் 'இ-கியூ.,' (எமர்ஜென்சி கோட்டா - அவசரகால ஒதுக்கீடு) மோசடி நடக்கிறது.
இத்தகையை நடவடிக்கையில் ஈடுபடுவோரை 'பொறி' வைத்து பிடிப்பதற்காக பறக்கும்படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது வி.ஐ.பி.,க்கள், முதியோர், உடல் நலம் குன்றியோர் வசதிக்காக, தேர்வு எழுதும் மாணவர்வசதிக்காக ரயிலில் 'இ-கியூ.,' முறை அமல்படுத்தப் பட்டது. இதன்படி, 'இ-கியூ' கோருவோர், அதற்கான விண்ணப்பத்தில் பெயர், வயது, உத்தியோகம், விலாசம், போன் எண், பயணம் செய்யும் ரயிலின் எண், முன்பதிவு டிக்கெட்டின் பி.என்.ஆர்., எண், பயணத்தின் நோக்கம் ஆகியவற்றை பூர்த்தி செய்து, கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு ரயிலில் இடவசதிக்கு ஏற்ப இருக்கை வசதி அளிக்கப்படும். இதற்காக, 'இ-கியூ' விண்ணப் பத்துடன் சிபாரிசு கடிதம் அல்லது மருத்துவ இனங்களுக்காக பயணம் மேற் கொள்ளும் விவரங்கள் இணைக்கப்படுவது வழக்கம். முறையான சிபாரிசுகடிதம் அல்லது உரிய ஆவணம் இல்லாமல் விண்ணப்பிக்கப்படும் 'இ-கியூ'விற்கு இருக்கை வசதி கிடைக்காது. இட வசதி கிடைக்கும்பட்சத்தில் மாலை 4 மணிக்கு மேல் மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ அல்லது முன்பதிவு மையங்களில் பி.என்.ஆர்., எண்ணை குறிப்பிட்டு கேட்டால், எந்த கோச்சில் அல்லது விரும்பும் ரயிலில் இடவசதி கிடைக்காவிட்டாலும், அடுத்ததாக வரும் ரயிலில் இட ஒதுக்கீடு குறித்து விவரங்கள் பெறலாம். இப்படியும் நடக்குது 'இ-கியூ' மோசடி: பயணிகளின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட 'இ-கியூ'வில் மோசடி நடப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன்படி, வி.ஐ.பி.,க்களின் சிபாரிசுகடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை தவிர, சம்பந்தம் இல்லாதவர்களும் போலிபெயர்களில் 'இ-கியூ'விற்கு விண்ணப்பித்து இடஒதுக்கீடு பெற்று பயணிப்பது தெரிய வந்து உள்ளது. டில்லியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் பெயரில்,மதுரையில் இருந்து சென்னை செல்ல விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 'இ-கியூ' வழங்கப் பட்டது. மத்திய அமைச்சர் பெயரில் தொடர்ந்து சிபாரிசு
கடிதம் வரவே, சந்தேகம் அடைந்த ரயில்வே அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மத்தியஅமைச்சரின் அலுவலகத்திற்கு போன் செய்து விவரங்கள்கேட்டனர். அப்போது, இதுபோன்ற சிபாரிசு கடிதம் அனுப்பப் படவில்லை என பதில் கிடைத்தது. 'பொறி' வைத்து பிடிக்கும் பறக்கும்படை: எனினும், மத்திய அமைச்சர் பெயரில் சிபாரிசுகடிதத்துடன் மீண்டும் 'இ-கியூ' கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், திட்டமிட்டே, அந்த கடிதத்தை ஏற்று கொண்டு கடந்த ஜூலை 28ம் தேதி பொதிகை எக்ஸ்பிரசில் (2662), மதுரையில் இருந்து சென்னைக்கு இரண்டு படுக்கை வசதி இருக்கைகள் ஒதுக்கப் பட்டன. பொதிகை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் நின்றபோது, பறக்கும்படையினர் பொதிகையில் ஏறி, அந்தக்குறிப்பிட்ட 'இ-கியூ' டிக்கெட்டில் பயணம் செய்த தம்பதியினரை மடக்கினர். அவர்களிடம் விசாரிக் கையில், அவர்கள் மத்திய அமைச்சர்கடிதத்தை போலியாக பயன்படுத்தி, போலி பெயர்களில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து டிக்கெட்பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக 1,128 ரூபாய்வசூலிக்கப்பட்டது. 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் என்பதால், கருணை அடிப்படையில் அதே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க பட்டனர்.தடுக்க நடவடிக்கை: 'இ-கியூ' மோசடியை தடுக்க புதிய யுக்திகள் கையாளப்படுகிறது. இதன்படி, 'இ-கியூ' கேட்டு வரப்படும் பேக்ஸ் எந்த எண்ணில் இருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக் கின்றனர். உதாரணமாக, மத்திய அமைச்சர் பிரபுல் படேல்அலுவலகத்தில் இருந்து 'இ-கியூ' கடிதம், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திற்கு பேக்ஸ் அனுப்பப்படும்போது, பேக்ஸ் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் ஆய்வு செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் அலுவலகத்திலிருந்து பேக்ஸ் அனுப்பப் படவில்லை என தெரிந்தால், அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது. உண்மையான சிபாரிசு கடிதத்திற்கு 'இ-கியூ' வழங்கப்படுகிறது. அதிலும், கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களை தவிர வேறொருவர் பயணம் செய்வது பறக்கும்படையினரின்சோதனையில் தெரியவந்தால், அபராதம் வசூலிக்கப்படுவதோடு, 'இ-கியூ' சிபாரிசு செய்தவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை ரயில்வேஅதிகாரிகள் தொடர்ந்து மேற் கொண்டு வரும்பட்சத்தில் 'இ-கியூ' மோசடியை முற்றிலும் ஒடுக்க இயலும்.வெளிப்படையான நடவடிக்கை தேவை மதுரை கோட்ட ரயில்வேயில் 'இ-கியூ' மோசடியை தடுக்கநடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், வெளிப்படையான நடவடிக்கையாக தினமும் பெறப்பட்ட 'இ-கியூ' விண்ணப்பங்களின் விவரம், அவற்றில் அனுமதி வழங்கப்பட்ட இடஒதுக்கீடு விவரம், போலி பெயர்களில் மோசடியில் ஈடுபட்டோரது பெயர், விலாசம் மற்றும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய விபரங்களை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.