ADDED : ஜூலை 30, 2010 03:43 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், வார்டு மறு சீராய்வு செய்த ஊராட்சிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.ஊராட்சிகளில், ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் என்ற முறையை மாற்றி ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு ஊராட்சியிலுள்ள வார்டுகளும் மறு சீராய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட ஊராட்சிகள் அடிப்படையில் வார்டுகள் மறுசீராய்வு செய்யும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், வக்கம்பாளையம், தொண்டாமுத்தூர், சிஞ்சுவாடி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டணம் ஆகிய ஐந்து ஊராட்சிகளும், ஆனைமலை ஒன்றியத்தில், கரியான்ஞ்செட்டிபாளையம், பில்சின்னாம்பாளையம், ரமணமுதலிபுதூர், மாரப்பக்கவுண்டன்புதூர் ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் வார்டுகள் மறுசீராய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என, கலெக்டர் உமாநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இம்மாதம் வார்டு மறுசீராய்வு செய்துள்ள ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஆய்வு செய்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்தில், உடனடியாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் ஆய்வு முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.