விசா நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்: வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கோரிக்கை
விசா நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்: வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கோரிக்கை
விசா நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்: வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கோரிக்கை

புதுடில்லி: இந்தியாவில், விசா பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பத்திரிகையாளர்கள் தங்கள் நாட்டிலிருந்து அளிக்கும் விண்ணப்பங்கள், டில்லிக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அதன் மீது, நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், விண்ணப்பித்த 60 நாட்களுக்குப் பிறகு விசா கிடைக்கப் பெறுகிறது. இதனால், சர்வதேச ஊடகவியலாளர்கள், இந்தியாவுக்கு வந்து, அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் தாமதமும், தடையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், கடந்த மே மாதம் 24ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுசுமு ஆராய், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான விசா கிடைப்பதில், தாமதம் ஏற்படுவதாகவும், அதை உடனடியாக பெறும் வகையில், விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அப்போது பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார்.
அடுத்த இரண்டு நாட்களில், இதுகுறித்து, வெளிநாட்டு பத்திரிகை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பத்திரிகையாளர் விசா அளிப்பதற்கான சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விசா தொடர்பான சில விண்ணப்பங்களின் மீது, கடந்த 42 மாதங்களாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருப்பது கண்டு பிரதமர் அலுவலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விவகாரங்களில், விரைந்து நடவடிக்கை எடுத்து, அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.