ADDED : ஆக 05, 2010 02:49 AM
தர்மபுரி: ஆடிப்பெருக்கையொட்டி பல்வேறு பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் நேற்று வேலை வாய்ப்புக்காக ஊர் திரும்பியதால், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.
நேற்று முன்தினம் ஆற்றுப்படுகை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி மற்றும் தென்பெண்ணையாற்று படுகை பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு விழாவுக்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்தோர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் திரும்பினர். ஆடிப்பெருக்கு கொண்டாடிய பின் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் வேலை வாய்ப்புக்காக திரும்பினர். இதனால், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், சேலம், ஈரோடு, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதே போல் ஒகேனக்கல்லுக்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் ஊர் திரும்பியதால், நேற்று இரவு முழுவதும் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.