Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AMADDED : ஜூன் 24, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில், பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும், தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, முதல்வர் அளித்த பதில்:



கள்ளக்குறிச்சி தாலுகா, கருணாபுரத்தைச் சேர்ந்த 47 பேர், கடந்த 19ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தியதால் இறந்த சம்பவம் அறிந்து வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, 164 பேரில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 47 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, தாமோதரன், மதன், விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க, மாவட்ட காவல் துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, வருவாய்த் துறை சார்பில், அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுகின்றன.

அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மெத்தனால், சட்ட விரோதமாக கள்ளத்தனமான முறையில், நம் மாநிலத்தில் கொண்டு வரப்படுவது, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், போதைப்பொருட்கள் விற்போர் மீது, பாரபட்சமின்றி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதல் நிவாரணம்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியுடன், கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படும்.

*இந்த சம்பவத்தில் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும், தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்

*பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும், பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை, மாத பராமரிப்பு தொகையாக, தலா 5,000 ரூபாய் வழங்கப்படும்

*பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, உடனடி நிவாரணத் தொகையாக, அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய், நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்படும். அவர்கள், 18 வயது பூர்த்தியானதும், அந்தத் தொகை, வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்

*பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

*பெற்றோர் இருவரையோ, ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்கள் விருப்பத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓடி ஒளிபவனல்ல நான்!

முதல்வர் மேலும் கூறியதாவது:


எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளிநடப்பு செய்யாமல், சபையில் தன் கருத்துகளை பதிவு செய்திருக்கலாம். அதை செய்யாமல், இதுபோன்ற முக்கியமான பிரச்னையிலும், அரசியல் காரணங்களுக்காக, தன் கட்சியினருடன் வெளியே சென்று விட்டார்.நடந்த சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என பேசினர்.

உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமின்றி, தமிழக முதல்வர் என்ற முறையில், எந்த பிரச்னையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால் தான், பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். திறந்த மனதோடு இரும்புக்கரம் கொண்டு, குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது, போதைப்பொருட்கள் விவகாரத்தில், அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் குறித்த பட்டியல் உள்ளது. அதை வைத்து, அரசியல் பேச விரும்பவில்லை. துயரம் மிகுந்த இந்த சம்பவத்தை வைத்து, அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். சமூக விரோத சக்திகளிடம் இருந்து, மக்களை காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

விஷச்சாராயம் ஆனது கள்ளச்சாராயம்!


*கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 45க்கும் மேற்பட்டோர் இறந்தது, தமிழகம் முழுதும் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 19ம் தேதி இச்சம்பவம் நடந்ததும், முதல்வர் தன் எக்ஸ் வலைதளப்பதிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இறந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார்

*அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, அரசு அனுப்பிய செய்திக் குறிப்பில், பாக்கெட் சாராயம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்ட அதிகாரிகள், கள்ளச்சாராயம் எனக் குறிப்பிடாமல் விஷச்சாராயம் எனக் குறிப்பிடுங்கள் என்றனர். மறுநாள், மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்ததால், இறப்பு ஏற்பட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

* நேற்று முன்தினம் சட்டசபையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தபோது, சபாநாயகர் அப்பாவு, ரசாயனம் கலந்த சாராயம் குடித்தவர்கள் எனக் குறிப்பிட்டார்

*சட்டசபையில் முதல்வர் நேற்று பேசுகையில், மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தியதால், 47 பேர் இறந்தனர் எனக் குறிப்பிட்டார்.

போட்டி நிவாரணம்!


கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, நேற்று முன்தினம் காலை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். உடனே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி விரைந்தார்; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இறந்துள்ளனர். பெற்றோரை இழந்து வாடும் அவர்களுடைய மூன்று குழந்தைகளின் கல்விச்செலவை, அ.தி.மு.க., ஏற்கும். அவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம், 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, பழனிசாமி அறிவித்தார்.அத்துடன், இறந்தவர்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள, 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார்.

குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க., ஏற்கும் என அறிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், தமிழக அரசு ஏற்கும் என்பது உட்பட பல நிவாரணங்களை, நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us