Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டர்கள் பாதுகாப்புக்கு விதிகள்: தமிழக அரசு வெளியீடு

டாக்டர்கள் பாதுகாப்புக்கு விதிகள்: தமிழக அரசு வெளியீடு

டாக்டர்கள் பாதுகாப்புக்கு விதிகள்: தமிழக அரசு வெளியீடு

டாக்டர்கள் பாதுகாப்புக்கு விதிகள்: தமிழக அரசு வெளியீடு

UPDATED : நவ 14, 2024 12:00 AMADDED : நவ 14, 2024 12:47 PM


Google News
Latest Tamil News
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 11 விதிகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை கிண்டி மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தினர். டாக்டர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு கீழ்கண்ட உத்தரவுகளை தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் பிறப்பித்து உள்ளார்.

இதன்படி,

1. அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களில் வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு சட்டத்தின்படி தண்டனை மற்றும் அபராதத்திற்கான விதிகளை அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வைப்பதுடன், ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என்பதை தனியாக எடுத்துக் காட்ட வேண்டும்.

இச்சட்டத்தின்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சொத்துகளை சேதப்படுத்துவது குற்றம். ஜாமினில் வெளிவர முடியாத வகையில் 3 முதல் 10 ஆண்டுகள் சிறையில் இருப்பதுடன் அபராதம் செலுத்த வேண்டும்.

2. பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் அமல்படுத்தவும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பாதுகாப்பு குழு மற்றும் வன்முறை தடுப்பு குழு அமைக்க வேண்டும்.

மருத்துவ பாதுகாப்பு குழுவுக்கு வட்டார மருத்துவ அதிகாரி தலைமை வகிக்கலாம்.

வன்முறை தடுப்பு குழுவுக்கு மூத்த டாக்டர்கள் தலைமை தாங்கலாம்.நோயாளி நல சங்கத்தில் இருந்து உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

3. ஆரம்ப சுகதார மையங்களில் முக்கிய இடங்களில் பொது மக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் வருகை முறைப்படுத்த வேண்டும். இதற்காக பார்வையாளர் பாஸ் வழங்குவதுடன், நேரக்கட்டுப்பாடு விதித்து அதற்கான பலகையை காத்திருப்போர் அறையில் பொருத்த வேண்டும்.

4. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை கண்காணிக்க வேண்டும்.

5. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதுடன், ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவ்வபோது சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையத்தில், உரிய இடத்தில் போலீஸ் உதவி எண்ணை வைக்க வேண்டும்.

6. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், தங்களது மொபைல் போனில், காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது அவசர காலத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை உடனடியாக அனுப்பும்.

7. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காலிகமாக இரவு நேர காவலாளி அல்லது பாதுகாவலரை நியமிக்கலாம். இதற்காக உள்ளூர் அதிகாரிகள் உதவியை நாடலாம்.

8. பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவுப்பணியின் போது டாக்டர்கள், நர்சுகள், பாதுகாப்பாக செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

9. ஆரம்ப சுகாதார நிலையங்களை சுற்றி உள்ள புதர்களை அகற்றுவதுடன், உள்ளாட்சி அமைப்பு உதவியுடன் சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

10. ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு உள்ள கிரில் கதவுகளை மூடி வைப்பதுடன், பொது மக்கள் வசதிக்காக மெயின் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.

11. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் புகார்களை விசாரிக்க வட்டார அளவில் குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us