UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 10:29 AM
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மாநில அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி திவ்யா கூறியதாவது: பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.சி., தேர்வில், 487 மதிப்பெண் பெற்ற நான், தொடர்ந்து எழுதிய மாதிரி தேர்வுகள் மூலம் தான், முக்கிய நான்கு பாடங்களில், 200க்கு 200 என்பதை சாதிக்க முடிந்தது. சென்னை அண்ணா பல்கலையில், இ.சி.இ., பிரிவில் சேர்ந்து படிக்கவுள்ளேன். எதிர்காலத்தில் சிறந்த சாப்ட்வேர் இன்ஜினியராக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இவ்வாறு திவ்யா கூறினார்.
இரண்டாம் இடம் பிடித்த மாணவர் யோகபரசுகன் கூறுகையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில், நான்கு பாடங்களில் சென்டம் பெற்றுள்ளதால், இன்ஜினியரிங் ரேங்க் பட்டியலில், மாநில அளவில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதுபோல், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளேன். மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட் கல்லூரியில், பி.இ., ஏரோ நாடிக்கல் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன் என்றார்.
மூன்றாம் இடம் பிடித்த, நன்மங்கலத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் பால்ராஜ் கூறுகையில், மருத்துவ கவுன்சிலிங்கிலும் மாநில அளவில் நான்காவது இடமும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மூன்றாவது இடமும் பிடித்தது, மகிழ்ச்சியை அளிக்கிறது. மருத்துவம் படிக்கவே, எனக்கு விருப்பம். அது இல்லாத பட்சத்தில், மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து படிப்பேன் என்றார்.
எட்டாம் இடம் பிடித்த, மகாலட்சுமி கூறுகையில், ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மாநில அளவில் எட்டாவது இடம் பிடித்தது, மகிழ்ச்சியை அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன் பிரிவை தேர்வு செய்வேன். அதன் பிறகு, அமெரிக்காவில் எம்.எஸ்., படிக்க வேண்டும் என்பது என் லட்சியம் என்றார்.
