மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வினியோகம்
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வினியோகம்
UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM
ADDED : ஜூன் 30, 2011 10:16 AM
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், அச்சுபகர்ப்பு நகல் கோரி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மாற்றி வழங்கப்படவுள்ளன. மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கு தங்களுடைய இருப்பிட முகவரிக்கு அருகாமையிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் இன்று முதல் ஜூலை மாதம் 2ம் தேதி வரை மூன்று நாட்கள் வினியோகம் செய்யப்படவுள்ளன.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் மதிப்பெண் மாறுதல் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விரைவு அஞ்சல் மற்றும் முன்னர் பெறப்பட்ட மதிப்பெண் சான்றிதழை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைத்து, மாற்றம் செய்யப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்று செல்லலாம்.
குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட்ட மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவர்கள் திருநெல்வேலி முதன்மைக்கல்வி அலுவலகத்திலும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தோர் மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருப்போர் திண்டுக்கல் அலுவலகத்திலும், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருப்போர் திருச்சி அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். திருவாரூர், நாகை, காரைக்கால், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருப்பவர்கள் தஞ்சாவூர் அலுவலகத்திலும், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருப்பவர்கள் சேலம் அலுவலகத்திலும், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருப்போர் கோயம்புத்தூர் அலுவலகத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருப்பவர்கள் வேலூர் அலுவலகத்திலும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் இருப்போர் விழுப்புரம் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்கள் சேத்துப்பட்டு எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்னை சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், சென்னை மாவட்டத்திற்கு எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
