UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM
ADDED : ஜூலை 13, 2011 03:48 PM
பீகாரில் உள்ள சூப்பர் 30 என்ற ஐ.ஐ.டி., பயிற்சி நிறுவனம் ஆண்டு தோறும் ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறது. இங்கு இந்தாண்டு முதல் வழக்கமாக அனுமதிக்கப்படும் 30 இடங்களிலிருந்து 60 இடங்களாக அதிகரிக்கப்படுகிறது என அதன் நிர்வாக இயக்குனர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு முதல் பீகாரை தவிர்த்து உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்தும் பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். பீகாரைத் தவிர வேறு எங்கும் தனது பயிற்சி நிறுவனத்தின் கிளைகள் இல்லை என்றும், "சூப்பர் 30' என்ற பெயரில் பல போலி பயிற்சி நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது எதிர்கால திட்டம் குறித்து அவர் பேசுகையில், பீகாரின் பின்தங்கிய மாணவர்களுக்காக "மாதிரி பள்ளி' ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம் என்றார். பீகார் அரசு தனக்கு உதவ விரும்பினால் இந்த "மாதிரி பள்ளி' அமைப்பதற்கான இடத்தை குறைந்த விலையில் வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கு நாடு முழுவதும் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் பீகாரில் உள்ள இந்த பயிற்சி நிறுவனம் சிறப்பம்சம் வாய்ந்ததாக திகழ்கிறது.
2003ல் துவக்கப்பட்ட இப்பயிற்சி நிறுவனம் பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு, உணவு, இருப்பிடம், பயிற்சியை இலவசமாக வழங்குகிறார். தினமும் 16 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்நிறுவனத்தில் படித்த 30 மாணவர்களும் வெற்றி பெற்று "ஹாட்ரிக்' சாதனை படைத்தனர். 2011ல் 24 பேர் வெற்றி பெற்றனர். இந்த "சூப்பர்30' நிறுவனத்தை பற்றி "டைம்ஸ்' இதழ் சமீபத்தில் பாரட்டியது குறிப்பிடத்தக்கது.
