UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM
ADDED : ஜூலை 19, 2011 10:52 AM
சமச்சீர் கல்வி வழக்கில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. 22ம் தேதிக்குள், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, மாணவர்களுக்கு இன்று முதல், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 22ம் தேதிக்குள், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தான், ஐகோர்ட் கூறியுள்ளது. 19ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறவில்லை. எனவே, 22ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது.
தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல் முறையீடு செய்ய உள்ளது. கடந்த முறை, விரைவாக தீர்ப்பு பெற்றதுபோல், இந்த முறையும் தமிழக அரசின் அப்பீல் மனுவை, அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வலியுறுத்தப்படும்.
செவ்வாய் கிழமையன்று அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு வினியோகம் செய்ய ஒரு நாள் போதும். அதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், மாணவர்களுக்கு புத்தக வினியோகம் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை.
