UPDATED : ஆக 29, 2015 12:00 AM
ADDED : ஆக 29, 2015 10:29 AM
ஜப்பானில் உள்ள, நான்ஸான் பல்கலை மாணவர்களுக்கு, சென்னை பல்கலை மாணவர்கள், தமிழக கலாசாரத்தில் உள்ள பரமபதம், தாயம் போன்ற விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தனர்.
சென்னை பல்கலையின் ஊடகவியல் துறை சார்பில், பல்கலை வளாகத்தில், பண்பாட்டிடை தொடர்பியல் பயிலரங்கம் நடந்தது. ஊடகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ரவீந்திரன், சென்னையில் உள்ள ஜப்பான் துாதரக ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சியாளர் புகாவோ ஜூனிச்சி ஆகியோர் தலைமையில், மாணவர்கள், இரு நாட்டு பழக்க வழக்கங்களை பரிமாறி கொண்டனர்.
தமிழக கலாச்சார விளையாட்டான தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து, அவர்களுடன் விளைாயாடினர். இதேபோல், ஜப்பான் மாணவர்கள், தங்கள் நாட்டின் பிரசித்தி பெற்ற காகித கலையான, ஓரிகமியை கற்று கொடுத்தனர். இதேபோல், தமிழக பெண்கள் கலாசாரப்படி மருதாணியிடுதல், ஜப்பான் கலாச்சாரப்படி நகத்தை அலங்கரித்தல் போன்றவற்றையும், இரு தரப்பு மாணவர்களும் இணைந்து மேற்கொண்டனர்.
பேராசிரியர் ரவீந்திரன் கூறும்போது, இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம், ஊடகவியல் துறை மாணவர்கள், படிக்கும்போதே வெளிநாட்டு மாணவர்களின் பழக்க வழக்கங்களை அறிவதுடன், சர்வதேச மாணவர்களின் தொடர்பையும் கல்லுாரி படிப்பிலேயே பெற முடியும், என்றார்.
