UPDATED : செப் 21, 2015 12:00 AM
ADDED : செப் 21, 2015 10:41 AM
மதுரை
: மதுரை
வேளாண் கல்லுாரியின் 50வது ஆண்டு பொன் விழாவை யொட்டி, நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் வாசிமலை தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்டு, மதுரை வேளாண் கல்லுாரியில் படித்து, தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் சனிலா, ரசாயன ஆயுதங்களை தடை செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற குழுவின் உறுப்பினர்.கல்லுாரி அனுபவம் குறித்து அவர் பேசியதாவது: கல்லுாரி பருவம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இங்கு ௧௯௮௫ -௮௯ம் ஆண்டு வரை படித்தேன்.
அக்காலகட்டத்தில் இந்த வளாகத்தில் சைக்கிள் ஓட்டியது, தோழிகளுடன் மரத்தடியில் படித்தது போன்ற பசுமையான நினைவுகள் இன்னும் என் மனதில் நீங்காத இடம் பெற்று உள்ளது. பேராசிரியர்கள் ஒத்துழைப்பால், இங்கு படித்த பலரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., விஞ்ஞானிகள், வெளிநாடுகளில் நல்ல உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.
சமுதாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் வெவ்வேறு துறைகளில் இக்கல்லுாரி பழைய மாணவர்கள் பணிபுரிவது, இக்கல்லுாரிக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது, என்றார். மத்திய அரசு செயலர் சுப்புராஜ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா, கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தி.மு.க., எம்.பி., தங்கவேல், முன்னாள் டீன் சவுந்திர பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
