மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர எனது பள்ளி எனது பொறுப்பு திட்டம்
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர எனது பள்ளி எனது பொறுப்பு திட்டம்
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர எனது பள்ளி எனது பொறுப்பு திட்டம்
UPDATED : ஜன 27, 2024 12:00 AM
ADDED : ஜன 27, 2024 03:25 PM
சித்ரதுர்கா: அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர் உதவியுடன் எனது பள்ளி எனது பொறுப்பு என்ற திட்டம் வகுக்கப்படும். இத்திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார் என பள்ளி கல்வி எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.சித்ரதுர்காவில் பள்ளி கல்வி துறை முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் மது பங்காரப்பா ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:அரசு பள்ளிகளில் படித்தவர்கள் உயர் பதவிகளை வகித்து உள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில், முன்னாள் மாணவர் சங்கங்கள், அரசு நிதியை பயன்படுத்தாமல், உயர்தர பள்ளிகளை கட்டி கொடுத்துள்ளனர்.எனவே, பழைய மாணவர் சங்கமும், ஆசிரியர்களும் எனது பள்ளி, எனது பொறுப்பு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி, பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர் உதவியுடன் எனது பள்ளி எனது பொறுப்பு என்ற திட்டம் வகுக்கப்படும். விரைவில் இத்திட்டத்தை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார்.எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டு தேர்வு முடிவுகளில், சித்ரதுர்கா மாவட்டம் மாநில அளவில் கடந்தாண்டு முதலிடம் பிடித்தது. வெற்றிக்காக பின்பற்றப்பட்ட திட்டங்கள், பாட வாரியான பயிலரங்குகள், திட்டமிட்ட முறை மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும். இது முழு மாநிலத்துக்கும் செயல்படுத்தப்படலாம். சித்ரதுர்காவின் வெற்றிகரமான திட்டத்தை மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும்.மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் முழு விபரமும் தயாரிக்கப்பட வேண்டும். இதில், பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் அதிக பொறுப்பேற்க வேண்டும்.இதுதவிர, சம்பந்தப்பட்ட பிளாக் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பை பெற்று, பள்ளிக்கு வெளியே இருக்கும் குழந்தைகளை, பெற்றோரிடம் வற்புறுத்தி பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், ஷூ, பால், முட்டை, வாழைப்பழம் உட்பட பல வசதிகளை அரசு செய்து கொடுத்து உள்ளது. எனவே, பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


