/வாராவாரம்/சிந்தனைக் களம்/அழிவுக்கு அழைத்து செல்லும் ஆர்வம் தேவையாஅழிவுக்கு அழைத்து செல்லும் ஆர்வம் தேவையா
அழிவுக்கு அழைத்து செல்லும் ஆர்வம் தேவையா
அழிவுக்கு அழைத்து செல்லும் ஆர்வம் தேவையா
அழிவுக்கு அழைத்து செல்லும் ஆர்வம் தேவையா

- எம்.கருணாநிதி-
காவல்துறை கண்காணிப்பாளர்- - ஓய்வு
ஒன்றை பெறுவதற்காக கூடும் கூட்டம்
இலவசமாக வினியோகிக்கப்படும், வேஷ்டி, புடவை, உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், சாமி பிரசாதம் முதல் தீர்த்த நீர் வரை எதையும் வாங்குவதற்கு முண்டியடித்துப் போராடும் கூட்டம்.இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். இங்கு கூடும் கூட்டத்தினர் வறுமையின் காரணமாக கூடுவதாக உறுதியாக கூற இயலாது. இலவசமாக கிடைக்கும் ஒன்றைப் பெறும் ஆர்வம், இயற்கையாக மக்கள் மனதில் இருப்பதுதான் காரணம்.
ஒன்றை பார்ப்பதற்காக கூடும் கூட்டம்
இறைவனை தரிசிக்க ஆலயத்தில் கூடுகிற கூட்டத்தை விட, மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களைப் பார்க்கக் கூடும் கூட்டம், மிகவும் தீவிரமாக செயல்படும்.
ஒன்றை எதிர்ப்பதற்காக கூடும் கூட்டம்
சமாளிக்க இயலாத, மிகவும் சவாலான கூட்டம், எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடும் போராட்டக்காரர்கள் கூட்டம். எதையாவது செய்து அரசு மற்றும் சாதாரண மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அரசுக்கு எதிராக திருப்பவும் வேண்டும் என்பதற்காக, அசாதாரணமாக நடந்து கொள்வர்.பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயல்வர்; ஒருவர் செயலை அடுத்தவர் மிஞ்ச முற்படுவர். அதைத் தடுப்பதற்காக, போலீசார் எடுக்கும் சாதாரண நடவடிக்கையைக் கூட பெரிதுபடுத்தி, பிரச்னை செய்வர். நடக்காததை நடந்ததாகக் கூறி, 'போலீஸ் அராஜகம்' என்று குரல் கொடுப்பர்.ஆனால் இது, ஆளும் அரசுக்கு எதிரானது என்பதால், இதைக் கட்டுக்குள் கொண்டுவர முயலும் காவலர்களும், அதிகாரிகளும், அரசின் நன்மதிப்பைப் பெறவும், தங்கள் பகுதியில் அசம்பாவிதம் நடந்து தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், போராட்டக்காரர்கள் மீதுகூடியவரை கடுமையாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்து விடுவர். எதிர்ப்பாளர்களின் அத்துமீறலும், அரசின் ஆதரவுமே அவர்களுக்கு அந்த துணிவைக்கொடுக்கிறது.ஆளும்கட்சிக்கு எதிரணியிலிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யும் பேரணி, மாநாடு போன்றவற்றிற்கு அனுமதி கொடுப்பதில் ஆரம்பித்து, பாதுகாப்பு அலுவல் வரை, காவல்துறையினர், கடமையே என்று செய்ய வேண்டியதை செய்தாலும், அவற்றில் சற்று தயக்கமும், ஆர்வமின்மையும்கலந்திருக்கும்.அதற்கு காரணம், அதில் அதிக ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்பட்டால், ஆளும் கட்சியினரின் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும்.அது சில சமயங்களில் எல்லை மீறிப்போனால், உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இடமாற்றம் துவங்கி, அந்த கட்சியின் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டு, பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய ஆபத்தும் இருக்கிறது. இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.ஆளும் கட்சியின் இந்த எதிர்பார்ப்பும், அதிகாரிகளின்இந்த மனப்பாங்கும், சூழ்நிலை காரணமாக இயற்கையாக உருப்பெற்றவை.
என் அனுபவம் இது
நான் நாகப்பட்டினம் நகர உதவி ஆய்வாளராக இருந்த போது, ஆளும்கட்சிக்கு எதிரணியில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன், தன் கட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூட்ட முடிவில் அவர், மேடையை விட்டு இறங்கியபோது, எனக்கு மிகவும் பழக்கமான உள்ளூர் பிரமுகரும், நடிகர் திலகத்தின் உறவினருமான ஒருவர், நடிகர் திலகத்திடம் என்னைஅறிமுகம் செய்து வைத்தார்.அவ்வளவுதான்... ஒரு நொடியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை, மறுநாள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒருவர் ரகசிய தகவல் மற்றும் புகாராக கொண்டு செல்லவே, மாவட்ட கண்காணிப்பாளர், அனுபவமிக்க பண்பான அதிகாரி என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டார்.
இப்படி செயல்படுங்களேன்
நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வரும் கட்சித் தலைவர்களிடம், நிபந்தனை விதிப்பதில், ஆளும்கட்சிக்கு காட்டும் பரிவும், எதிர்க்கட்சியிடம் காட்டும் கடுமையும், சில அதிகாரிகளின் அணுகுமுறையில், சற்று வெளிப்படையாகவே தெரியும்.
மக்களும் சுதாரிக்க வேண்டும்
மக்களின் ஆர்வமும், ஆசையும் கூட, காரணத்தோடு கூடியதாகவும், ஒரு வரம்புக்குள் அடங்கியதாக இருக்கும் வரை, ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. காரணமில்லாத, வரம்பு மீறிய ஆர்வமும், ஆசையும், ஆபத்தை விளைவிக்கத்தான் செய்யும். செய்த தவறுக்கு பலமடங்கு அதிகமான இழப்பைச் சந்தித்தவர்களின் தவறைச் சுட்டிக்காட்டுவது, நம் நோக்கமல்ல; ஆனால், இதே மாதிரியான தவறும், இழப்பும் மறுபடியும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற சமூக அக்கறையே காரணம்.
அலைபேசி: 98404 88111
இ - மெயில்: spkaruna@gmail.com


