புதிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அமித் ஷாவிடம் அண்ணாமலை பட்டியல்
புதிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அமித் ஷாவிடம் அண்ணாமலை பட்டியல்
புதிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அமித் ஷாவிடம் அண்ணாமலை பட்டியல்
ADDED : ஜூன் 04, 2024 02:41 AM

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ.,வுக்கு நியமிக்கப்பட உள்ள புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேர்தல் பணியில் சரிவர ஈடுபடாதவர்களின் விபரம் தெரிவித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதுடன், மத்திய அமைச்சராக தனக்கு விருப்பமில்லை எனவும், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட போவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை, 2021 ஜூலையில் நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, மாநில நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட வாரியாக அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தினார். அதன் விளைவாகவே, லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி உருவானது.
தேர்தலில் 19 தொகுதிகளில், அண்ணாமலை உட்பட மாநில நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். தேர்தல் செலவுக்கு பா.ஜ., மேலிடம் சார்பில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 15 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது.
சில தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நிதி, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளுக்கு முறையாக வழங்கப்பட்டது. பல தொகுதிகளில் கட்சி தலைமை வழங்கிய பணத்தை பதுக்கி விட்டதாக புகார்கள் எழுந்தன.
பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும் வாக்காளர்கள் அதிகம் இருந்த தொகுதிகளில், அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் களத்தில் இறங்கி, கட்சி பணிகளை கவனித்திருந்தால், இதுபோன்ற தவறுகள் நடந்திருக்காது.
மத்திய அமைச்சர் அமித் ஷா, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திற்கு கோவிலில் வழிபாடு செய்ய, ஓரிரு நாட்களுக்கு முன் வந்தார். அவரை, அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது, புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளார்.
தேர்தல் பணியில் சரிவர ஈடுபடாமல் ஒதுங்கிய நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களின் விபரங்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியில் பா.ஜ., ஆட்சி மூன்றாவது முறையாக அமையும் போது, தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், தமிழகத்தில் கட்சி வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.