Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த மறுக்கும் ஆவின்: மக்களை ஏமாற்ற பண்டிகை கால தள்ளுபடி என நாடகம்

ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த மறுக்கும் ஆவின்: மக்களை ஏமாற்ற பண்டிகை கால தள்ளுபடி என நாடகம்

ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த மறுக்கும் ஆவின்: மக்களை ஏமாற்ற பண்டிகை கால தள்ளுபடி என நாடகம்

ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த மறுக்கும் ஆவின்: மக்களை ஏமாற்ற பண்டிகை கால தள்ளுபடி என நாடகம்

ADDED : டிச 03, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
சென்னை: பால் மற்றும் பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் தள்ளுபடியை நடைமுறைப்படுத்தாமல், பண்டிகை கால தள்ளுபடி என, கண்கட்டு வித்தை காட்டி, தற்போது மீண்டும் விலையை ஏற்றியிருக்கும் ஆவின் செயலால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடந்த, 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு, ஜி.எஸ்.டி., சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தது.

அமல்


அதன் அடிப்படையில், நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகவும் வரி குறைப்பு செய்யப்பட்டது. இது, கடந்த செப்., 22 முதல் அமலுக்கு வந்தது.

அதன்பின், அமுல், நந்தினி, பான்லே உள்ளிட்ட பல்வேறு மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் பால் நிறுவனங்களும், ஜி.எஸ்.டி., குறைப்பின் பயனை முழுமையாக பொது மக்களுக்கு வழங்கின; பால் பொருட்களுக்கான விலையை குறைத்தன.

ஆனால், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மட்டும் ஜி.எஸ்.டி., குறைப்பு செய்யவில்லை. புதிய விலைப் பட்டியலையும் வெளியிடவில்லை.

மாறாக, நவம்பர் 30 வரை, பண்டிகை கால தள்ளுபடி வழங்குவதாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆவினின் இந்த நடவடிக்கை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பண்டிகை கால தள்ளுபடியை நிறுத்தி விட்டு, ஜி.எஸ்.டி., குறைப்பிற்கு முந்தைய விற்பனை விலையையே மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, நெய் விலை லிட்டருக்கு, 40 ரூபாயும், 5 லிட்டருக்கு, 350 ரூபாயும், 15 கிலோவுக்கு 1,155 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமி ழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், ''ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பயனை முழுமையாக மக்களுக்கு வழங்காத ஆவின் நிர்வாகம், ஆவின் நெய் விற்பனை விலையை உயர்த்திருப்பது கண்டனத்திற்குரியது,'' என்றார்.

கண்டனம்


இதற்கிடையே, 'ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்திற்கு இணங்க, ஆவின் பொருட்களின் விலையை உடனே குறைக்கவில்லை எனில், போராட்டம் முன்னெடுக்கப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'ஆவின் நெய், பனீர் விலை உயர்வு, தி.மு.க., அரசின் திருட்டுத்தனம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி, அறிக்கை வாயிலாக கடுமையாக விமர்சித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us