'என்னை பார்த்தா விளையாட்டா இருக்கா?' கட்சியினரிடம் கொந்தளித்த திருச்சி சிவா
'என்னை பார்த்தா விளையாட்டா இருக்கா?' கட்சியினரிடம் கொந்தளித்த திருச்சி சிவா
'என்னை பார்த்தா விளையாட்டா இருக்கா?' கட்சியினரிடம் கொந்தளித்த திருச்சி சிவா
ADDED : செப் 24, 2025 04:14 AM

கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., துணைப் பொதுச்செயலர் சிவா பேசிக் கொண்டிருந்தபோது, தாமதமாக வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக மேடையில் இருந்தவர்கள் எழுந்ததால், டென்ஷனான சிவா, கோபத்தில் கட்சியினரை திட்டியது, கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, முதல்வர் ஸ்டாலினால், 'ஓரணியில் தமிழகம்' என்ற இயக்கம் துவக்கப்பட்டது. இதில், ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள, 66,000க்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகளில், 'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தில் இணைந்துள்ளவர்கள், 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மானத்தை, உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்ச்சி, கடந்த 15ம் தேதி நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, உறுதிமொழி ஏற்பு கூட்டங்கள், கடந்த 20, 21ம் தேதிகளில், தி.மு.க., அமைப்பு ரீதியாக உள்ள 76 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த 20ம் தேதி, கரூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருந்தார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி சிவா, தனக்கே உரித்தான பாணியில், வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தல் என்பது ஒரு தத்துவ போர் எனக் குறிப்பிட்டு ஆவேமாக பேசிக் கொண்டிருந்தார்.
அவரது உணர்ச்சிகரமான பேச்சை, தி.மு.க.,வினர் தங்களை மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்துக்கு தாமதமாக வந்த செந்தில் பாலாஜி மேடை ஏறினார்.
அவரை பார்த்ததும், மேடையில் இருந்த தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்றனர். கூட்டத்தில், சிவா பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர்கள், செந்தில் பாலாஜியை நோக்கி கை அசைத்து, ஆரவாரம் செய்தனர். இதனால், திருச்சி சிவா பேச்சு தடைபட்டது.
உடனே, கோபம் அடைந்த சிவா, 'யோவ், யாரா இருந்தா என்ன... அவர் பாட்டுக்கு வருவாரு போவாரு... இங்க அடிவயிற்றிலிருந்து பேசிட்டு இருக்கேன்... உங்களுக்கெல்லாம் விளையாட்டா இருக்கா?' என, ஆவேசமாக கத்தினார்.
சிவா இப்படி பேசுவார் என, செந்தில் பாலாஜி உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டத்திலும், சிவாவின் கோபமும் கொந்தளிப்பும் சலசலப்பை ஏற்படுத்தியது.
உடனே சுதாரித்து கொண்ட செந்தில் பாலாஜி, நேரா சிவா அருகே சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, அவரை சமாதானப்படுத்தி விட்டு செந்தில் பாலாஜி தன் இருக்கையில் அமர்ந்தார். பின், பேச்சைத் தொடர்ந்தார் சிவா.
நீண்ட நேரம் பேசிய சிவா தன் பேச்சை நிறைவு செய்தபோது, தி.மு.க., தொண்டர் ஒருவர், நாற்காலியில் இருந்து எழுந்து நின்றார். அவரை பார்த்த சிவா, கோபத்துடன், 'உட்காருய்யா' என்றார். கட்சியினரிடம் சிவா கோபம் காட்டியது, அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -