Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ பார்க்கும் திசையெல்லாம் தீபஒளி பரவட்டும்

பார்க்கும் திசையெல்லாம் தீபஒளி பரவட்டும்

பார்க்கும் திசையெல்லாம் தீபஒளி பரவட்டும்

பார்க்கும் திசையெல்லாம் தீபஒளி பரவட்டும்

Latest Tamil News

ஒளிக்கு ஒரு நகரம்


காசி என்பதற்கு 'ஒளி' என பொருள். வருணா, அசி நதிகள் கங்கையில் கலப்பதால் வாரணாசி என்றும், பட்டுக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால் பனாரஸ் என்றும் காசிக்கு பெயருண்டு. முக்தி தலங்கள் ஏழில் முதன்மையானது காசி. ஹிந்துக்களின் புனித நகரமான இது கல்வித் தலமாகவும், ஜோதிர்லிங்கத் தலமாகவும் உள்ளது.

நவக்கிரகங்களில் ஒருவரான புதன் இங்கு விஸ்வநாதரை வழிபட்டே கிரக பதவியைப் பெற்றார். இங்கு வழிபடுவோர் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர். காசியில் ஓடும் கங்கா நதியில் படகு சவாரி செய்யும் போது நதியின் அழகை ரசித்து மகிழலாம். தீபாவளியன்று புனிதமான கங்கையில் நீராடுவது பெரும் புண்ணியம். இங்குள்ள 'தசாஸ்வமேத படித்துறையில் தினமும் மாலையில் நடக்கும் கங்கா ஆரத்தி விசேஷமானது. அப்போது உடலெங்கும் பரவும் ஆன்மிக அதிர்வலையை உணரலாம். கங்கா தீர்த்தம், பால், பூக்கள் கொண்டு சிவபெருமானுக்கு பக்தர்களே அபிேஷகம் செய்வது இங்கு மட்டுமே. இங்குள்ள அன்னபூரணி தீபாவளியன்று லட்டுத்தேரில் பவனி வருகிறாள். காசி யாத்திரை செல்வோர் தீர்த்த சொம்பு, காசி கயிறு, அன்னபூரணி சிலை வாங்குவது வழக்கம். வாழ்வில் ஒருமுறையாவது காசியை தரிசிப்போம். இதனால், நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும்.

தீபாவளிக்கு காரணம் யார்?


தீபாவளி என்றால் நரகாசுரன். அவனது தாய் சத்தியபாமா. தியாக உணர்வு மிக்க சத்தியபாமா, புத்திர சோகத்தை தாங்கிக் கொண்டு மகனின் இறப்பை தீபாவளியாக மக்கள் கொண்டாட வேண்டும் என கிருஷ்ண பகவானிடம் வேண்டினாள். அதனால் 'பண்டிகைகளின் ராஜா' என தீபாவளியை அழைக்கிறோம். இதே போல பகவத்கீதையை 'தீபாவளியின் தம்பி' என்கிறோம். தீபாவளியைப் போல கீதையும் தியாகத்தில் இருந்து தோன்றியதே இதற்கு காரணம்.

முதியவரான குருநாதர்கள் அமைதியான சூழலில் இளைய சீடர்களுக்கு சொல்வது தத்துவ உபதேசம். ஆனால், பகவத் கீதையோ போர்க்களத்தில் பிறந்தது. தேரில் எஜமானராக இருந்த அர்ஜுனனுக்கு, தேரோட்டியான கிருஷ்ண பகவான் உபதேசம் செய்தது இது. சம வயதுடைய கிருஷ்ண பகவானிடம், 'சிஷ்யனாக உன்னை சரணடைந்தேன். எனக்கு உபதேசம் செய்' என அர்ஜுனன் கேட்டபோது கீதை பிறந்தது. இதனால்தான் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்கிறோம். பண்டிகைகளில் தீபாவளியும், தத்துவங்களில் கீதையும் உயர்ந்தவை. தீபாவளி, கீதை இரண்டுக்கும் காரணமானவர் கிருஷ்ண பகவான் ஒருவரே.

ஐப்பசியில் தீபாவளி


இரண்டு பேருக்கு இடையில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி, தராசு போல நடுநிலையுடன் இருக்க வேண்டும். துலாக்கோல் என தராசுக்கு ஒரு பெயர் உண்டு. இதனால் தான், தீபாவளி கொண்டாடும் மாதமான ஐப்பசிக்கும் 'துலா மாதம்' என பெயரிட்டனர். தீபாவளி நீதியை எடுத்துச் சொல்கிறது. தன் மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவும் பொதுநலன் கருதி அழித்தனர். நீதி, நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம்.

பாசமலர் திருவிழா


வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளியன்று பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. வட மாநில சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்குகின்றனர். சகோதரிகளும் தங்களின் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கின்றனர். பாசமலர் திருவிழாவாக தீபாவளி உள்ளது.

இழந்ததை தருபவள்


புனித நதிகளின் மீது பக்தி கொண்டிருந்தாள் ஒரு பெண். இதற்காக வீட்டில் இருந்த மூன்று குடங்களை பளபளவென துலக்கி தண்ணீர் ஊற்றி வைப்பாள். அந்தக் குடங்களுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி என பெயரிட்டிருந்தாள். யாராவது தாகம் என்றால் மூன்று குடத்தில் இருந்தும் தண்ணீர் எடுத்து கலந்து 'திரிவேணி தீர்த்தம்' என கொடுப்பாள்.“குடத்து தண்ணீரை 'திரிவேணி தீர்த்தம்' என்கிறாளே! அப்படியானால், இவளின் வீடு என்ன பிரயாக்ராஜா?” என பலர் கேலி செய்தனர். ஆனால் அவள் முழுமையாக நம்பி வழிபாடு செய்தாள். ஒருமுறை அவளது கணவன் காசிக்கு போனான். அதற்கு முன்னதாக அவனது தாய் மோதிரம் ஒன்றைக் கொடுத்து, “மகனே! இதை கையில் அணிந்து கொள். இது சாதாரண மோதிரம் அல்ல. உன்னைப் பாதுகாக்கும் கேடயம்” என்றாள். மகனும் அணிந்து கொண்டான்.

காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய போது அந்த மோதிரம் தொலைந்தது. வீட்டுக்கு வந்ததும் வருத்தமுடன் விஷயத்தைச் சொன்னான். அவனது மனைவி, 'கவலைப்படாதீர்கள். தானாக மனம் உவந்து கொடுப்பவர் பொருளையே கங்காதேவி ஏற்பாள். அவள் கொடுப்பவளே தவிர வாங்குபவள் இல்லை. நம் வீட்டில் கங்கா தீர்த்தம் இருக்கிறதே. இப்போதே தாயிடம் வேண்டுகிறேன்'' என பிரார்த்தனையில் ஈடுபட்டாள். கங்கையும் அவள் மீது இரக்கப்பட்டாள். அந்த பெண் கையை விட்டு குடத்திற்குள் துழாவிய போது தொலைந்த மோதிரம் இருந்தது. கங்கையை நம்பிக்கையுடன் வழிபட்டால் இழந்த பொருள் கிடைக்கும்.

வீட்டிலும் கங்கை


தீபாவளியன்று அதிகாலை 5:30 - 6:00 மணிக்குள் உங்கள் வீட்டில் வழக்கமாக குளிக்கும் நீரில் கங்கை தீர்த்தம் இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய புண்ணியத்தை பெறலாம். வீட்டில் குளித்தாலும் பெற முடியும். இதைத்தான் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது, 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என கேட்கின்றனர். துறவிக்கும் தீபாவளி குளியல் அவசியம். கங்கா ஸ்நானம் செய்வதால் பாவம் நீங்கி மனம், உடல் புனிதம் பெறும்.

தீப ஸ்லோகம்



தீபாவளியன்று வீட்டில் தீபம் ஏற்றும் போது,



கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:|

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||



என்ற ஸ்லோகத்தை சொல்லுங்கள்.

இதன் பொருள்:


புழு, பறவை, கொசு, மரம், நீர், நிலத்தில் வாழும் உயிர்கள் எதுவானாலும், மனிதரில் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ, யாரானாலும், இந்த தீபத்தைப் பார்க்கும் அனைவரும், பாவங்களில் இருந்து விலகட்டும். பிறவிப்பிணியில் இருந்து விடுபடட்டும். இன்பமாக வாழட்டும்' தீபமேற்றும் புண்ணிய பலன் எல்லா உயிர்களையும் சேரட்டும் என்பதே இந்த ஸ்லோகம் சொல்வதன் நோக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us