தென் மாவட்ட பஸ் சேவை குறைப்பு; விழுப்புரத்திலிருந்து 'கட்' சர்வீஸ் இயக்கம்
தென் மாவட்ட பஸ் சேவை குறைப்பு; விழுப்புரத்திலிருந்து 'கட்' சர்வீஸ் இயக்கம்
தென் மாவட்ட பஸ் சேவை குறைப்பு; விழுப்புரத்திலிருந்து 'கட்' சர்வீஸ் இயக்கம்
ADDED : ஜன 10, 2024 12:41 AM

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட துார பஸ் சேவை குறைக்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டலத் திற்குட்பட்ட திருவண் ணாமலை, காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 2,493 பஸ்களில் நேற்று 2,245 பஸ்கள், அதாவது 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிற்சங்கத்தினர் போராட்டத்தால் பஸ் சேவைகள் பாதிக்காமல் இருப்பதற்காக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற டிரைவர்கள், தற்காலிக போக்குவரத்துக்கழக பணியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பயிற்சி பெற்று உரிமம் பெற்றுள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள் பட்டியலை, போக்குவரத்து கழக அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.
பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது, நிலமையை சமாளிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரத்திலிருந்து, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்களில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதற்கு பதிலாக, சேலம் செல்லும் பஸ்கள் கள்ளக்குறிச்சி வரையிலும், திருச்சி செல்லும் பஸ்கள் உளுந்துார்பேட்டை, பெரம்பலுார் வரையிலும் 'கட்' சர்வீசாக இயக்கப்பட்டன. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
-நமது நிருபர் -


