Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/ பேசாத நட்சத்திர பேச்சாளர்

 பேசாத நட்சத்திர பேச்சாளர்

 பேசாத நட்சத்திர பேச்சாளர்

8


ADDED : ஏப் 10, 2026 06:27 AM

Follow on Google

8

ADDED : ஏப் 10, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா. இவர், அந்த கட்சியின் சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளரும் கூட. ஆனால், இவரை, தி.மு.க.,வின் எந்த பிரசார கூட்டத்திலும் பார்க்க முடிவதில்லை. குறிப்பாக, 'ஆடியோ லீக்' பிரச்னைக்கு பின், 'அவரை எதற்கும் அழைக்க வேண்டாம்' என்றே அறிவாலயத்தில் அனைவரும் பேசிக்கொள்வதாக செய்தி உலா வருகிறது.

ராஜா, தேர்தலுக்கு முந்தைய சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. இருப்பினும், இந்த முறை கட்சி அவர் மீது பொறுமை இழந்து வருகிறது என கூறப்படுகிறது.

தொடர் பிரச்னைகள்



ராஜா மத்திய அமைச்சராக இருந்தபோது, '2ஜி' வழக்கில் சிக்கிக் கொண்டார். அவருக்கு எதிராக, கடந்த 2011 சட்டசபை தேர்தலை ஒட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை வைத்து மிரட்டியே, தி.மு.க.,விடம் இருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் வாங்கியது. அந்த வழக்கின் தாக்கத்தால், தி.மு.க., படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது. தேர்தலுக்கு பின், கட்சியில், ராஜா முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார்.

ஏழு ஆண்டு வனவாசத்திற்கு பின், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதில் வென்ற பின், கட்சியில் தன் அங்கீகாரத்தை மீட்க தொடங்கினார். இரண்டே ஆண்டுகளில், 2021 சட்டசபை தேர்தலின் போது, மீண்டும் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.

அப்போதைய முதல்வர் பழனிசாமியின் தாயாரை பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசினார். அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட பழனிசாமி, 'என் தாயாரை தி.மு.க., கேவலமாக பேசுகிறது' என பிரசாரம் செய்தார். இது, கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இருப்பினும், ராஜாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., இருந்தது. பட்டியல் இனத்தை சேர்ந்த, கட்சியின் துணை பொதுச்செயலராக இருந்த வி.பி.துரைசாமி பா.ஜ.,வில் இணைந்ததால், தி.மு.க.,வில் பட்டியலின முகங்கள் இல்லாமல் இருந்தது.

மேலும், ராஜாவின் டில்லி தொடர்புகள் தி.மு.க.,விற்கு தேவைப்பட்டன. இதெல்லாம் இருந்தாலும், ராஜாவின் ஹிந்து மத துவேஷ கருத்துக்கள், அவ்வப்போது தி.மு.க.,வுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தன. இதனாலேயே, பொது மேடைகளில் இருந்து ராஜாவை விலக்கியே வைத்திருந்தது தி.மு.க.

இந்த தேர்தலில்...



இந்த தேர்தலுக்கு, 33 தொகுதிகள் அடங்கிய சென்னை மண்டல பொறுப்பாளராக ராஜா நியமிக்கப்பட்டார். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 11 தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு ராஜா தான் மேலதிகாரி. ஆனால், ராஜாவின் திமிர் கலந்த பேச்சு, நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. ராஜாவின் செயல்பாடும் சமூகம் சார்ந்து இருந்ததாக, தலைமைக்கு தி.மு.க., நிர்வாகிகள் புகார் அனுப்பினர்.

அமைச்சர்கள் அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர், ராஜாவின் அறிவுரைகள் எதையுமே கண்டுகொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தொகுதி நிர்வாகிகளுடன் 'உடன்பிறப்பே வா' கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ராஜாவுக்கும் சேகர்பாபுவுக்கும் இடையே, முதல்வர் முன்னிலையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சி கட்டமைப்பின்படி, மாவட்ட செயலரை விட துணைப் பொதுச்செயலர் பதவி தான் பெரியது. ஆனால், தேர்தல் களத்தில் ராஜாவை விட சேகர்பாபு தான் முக்கியம் என தலைமை எண்ணியதால், சேகர்பாபுவுக்கு தான் ஆதரவு அளித்தது.

இது மட்டும் அல்லாமல், அமைச்சர் சேகர்பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர், திரு.வி.க., நகர், அம்பத்துார் ஆகிய தொகுதிகளுக்கு, ஏற்கனவே வென்றவர்களையே வேட்பாளர்களாக்க வேண்டும் என, தலைமைக்கு ராஜா பரிந்துரைத்தார். ஆனால், அந்த மூன்று தொகுதிகளுக்குமே வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். சேகர்பாபுவின் கையே ஓங்கியது.

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர், ராஜா, தேர்தல் பணிகளில் இருந்து மெல்ல மெல்ல விலகி இருக்க தொடங்கிவிட்டார். ராஜா சம்பந்தமான பிரச்னை ஏதும் இனி வராது என எதிர்பார்த்த தி.மு.க., தலைமைக்கு, சில நாட்களுக்கு முன் தலைதுாக்கிய ராஜாவின் 'ஆடியோ லீக்' விவகாரம் பெரும் தலைவலியை கொடுத்தது. மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பற்றி ராஜா பேசியது பழனிசாமிக்கு பிரசார ஆயுதமாக மாறிவிட்டது. இதனால், தி.மு.க., தலைமை ராஜா மேல் கடும் கோபத்தில் இருக்கிறது என, கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலுக்கும் இவரால் ஏதேனும் பிரச்னை வருகிறது. மாணவரணி பொறுப்பாளராகவும் இருக்கும் ராஜா, அந்த அணியின் மாநில செயலர் ராஜிவ்காந்தி மீது, தன் ஆதரவாளர்கள் வாயிலாக பாலியல் புகார் பரப்பி, அவரை கடந்த மாதம் மாற்றினார். ஏற்கனவே, பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களை விளாசுகின்றனர். இந்த வேளையில், ராஜிவ்காந்தியை மாற்ற வைத்தது ஒரு பின்னடைவு தான். அதனால் தான், முதல்வர், 'கட்சிக்குள் தேவையின்றி குழப்பத்தை உண்டாக்கினால், அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும், நடவடிக்கை பாயும்' என்று பேசினார். இப்போது 'ஆடியோ' பிரச்னை வேறு வந்திருக்கிறது. மேலிடம் கடும் கோபத்தில் தான் இருக்கிறது. துரைசாமி மட்டும் பா.ஜ.,விற்கு போகாமல் இருந்திருந்தால், ராஜாவுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமைக்கு ராஜா மீது இருக்கும் கோபத்தில், தாங்களும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, எந்த வேட்பாளரும் ராஜாவை பிரசாரத்திற்கு அழைப்பதில்லை. நட்சத்திர பேச்சாளராக இருந்தும், ராஜா பிரசாரம் செய்யாமல், கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இப்படியே இருந்தால், அரசியலில் இருந்து, தான் ஓரம் கட்டப்படுவோம் என பயந்த ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினரிடம் பேசி, அவர்கள் போட்டியிடும் திருவொற்றியூரில் பிரசாரம் செய்துள்ளார்.

இதற்கிடையில், அவர் தலைமையை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கும் இன்னொரு ஆடியோ விரைவில் வெளியாகும் என, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தன் பிரசார கூட்டங்களில் பேசி வருவது, ராஜாவை மட்டுமல்ல; கட்சித் தலைமையையும் அதிர வைத்திருக்கிறது.

இதனால், தேர்தலுக்கு பின் அவர் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர், தி.மு.க.,வினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap