Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/போக்குவரத்து செயல் திட்டம்: கோவை, மதுரைக்கு எப்போது?

போக்குவரத்து செயல் திட்டம்: கோவை, மதுரைக்கு எப்போது?

போக்குவரத்து செயல் திட்டம்: கோவை, மதுரைக்கு எப்போது?

போக்குவரத்து செயல் திட்டம்: கோவை, மதுரைக்கு எப்போது?

Latest Tamil News
சென்னை: கோவை, மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களுக்கு, தனித்தனியாக ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டம் தயாரிக்க, தமிழக அரசு தயங்குவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், அனைத்து நகரங்களுக்கும் முழுமையான திட்டம் தயாரிக்கும் பணி, நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

மதிப்பீடு


பொதுவான முழுமை திட்டம் போன்று, ஒவ்வொரு நகரத்துக்கும், 25 ஆண்டுகளில் தேவைப்படும் போக்குவரத்து வசதிகளை மதிப்பீடு செய்யும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டம் தயாரிக்க வேண்டும்.

இதில், சென்னை பெருநகர் பகுதிக்கு மட்டும், 2048 வரை செயல்படுத்துவதற்கான போக்குவரத்து செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 'கும்டா' எனப்படும் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம், இதை தயாரித்து உள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டம் இருந்தால் மட்டுமே, அதன் அடிப்படையில், மெட்ரோ ரயில் போன்ற புதிய திட்டங்களை பெற முடியும்.

கோவை, மதுரை போன்ற நகரங்களில், எதிர்கால தேவையை கருத்தில் வைத்து, பல்வேறு புதிய திட்டங்கள் தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால், நீண்ட கால அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டம் இல்லாதது, குறையாக அமைந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது, தமிழக அரசு உத்தேசித்துள்ள, 'செமி ஹைஸ்பீடு' ரயில் போன்ற திட்டங்களுக்கும் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.

பிரச்னை:


இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

சென்னை போன்று, கோவை, மதுரை நகரங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டங்கள் அவசியம். ஆனால், இந்த விஷயத்தில், அரசு தெளிவான முடிவை எடுக்காமல் உள்ளது. ஒரு நகரின் தற்போதைய மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை, போக்குவரத்து வசதிகள் பயன்பாடு அடிப்படையில், அடுத்த, 25 ஆண்டுகளில் ஏற்படும் தேவையை மதிப்பீடு செய்வதுதான் போக்குவரத்து செயல் திட்டம்.

எதிர்கால மக்கள் தொகை, வாகன பெருக்கம் அடிப்படையில், திட்டங்கள் இதில் பரிந்துரைக்கப்படும். சமீபத்தில் கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியது. ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டம் முறையாக இருந்து, அதன் அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட்டு இருந்தால், மெட்ரோ ரயில் திட்ட விஷயத்தில், தற்போது எழுந்துள்ள பிரச்னை தவிர்க்கப்பட்டு இருக்கும். இனியாவது, இதற்கான பணிகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் கூறுவது என்ன?


'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஐ.ஜெயகுமார் கூறியதாவது: கோவை, மதுரை போன்ற நகரங் களுக்கு, ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டம் தனியாக தயாரிக்கப்படவில்லை. கோவை, மதுரை நகரங்களுக்கு, டி.டி.சி.பி., கேட்டு கொண்டதன் அடிப்படையில், பொதுவான முழுமை திட்டத்தில், போக்குவரத்துக்கான பகுதியை நாங்கள் தயாரித்து கொடுத்து இருக்கிறோம். இதுவும், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த தக்க வகையில் தான் இருக்கும்.
அதன்பின், மீண்டும் புதுப்பிக்க வேண்டும். கோவைக்கான முழுமை திட்டத்தில், போக்குவரத்துக்கான அத்தியாயம் தற்போதைய சூழல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்த்தால், கோவையில் தற்போதைய மக்கள் தொகை, 20 லட்சத்தை கடந்துள்ளது. தேவைப்பட்டால், தனியாக போக்குவரத்து செயல் திட்டம் தயாரிப்பது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us