Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ விஜய்க்கு அமித் ஷா ஆதரவு; கூட்டணிக்கு வருமாறு அழைப்பு

விஜய்க்கு அமித் ஷா ஆதரவு; கூட்டணிக்கு வருமாறு அழைப்பு

விஜய்க்கு அமித் ஷா ஆதரவு; கூட்டணிக்கு வருமாறு அழைப்பு

விஜய்க்கு அமித் ஷா ஆதரவு; கூட்டணிக்கு வருமாறு அழைப்பு

ADDED : அக் 01, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் அல்லது தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுக்க வேண்டும் என்ற இலக்குடன், அமித் ஷா களமிறங்கியுள்ளார்.

இதற்காக, கடந்த ஏப்ரல் 11ம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை அறிவித்தார். ஆனால், ஐந்தரை மாதங்கள் கடந்தும், இக்கூட்டணியில் புதிய கட்சிகள் இணையவில்லை.

கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இருந்த கட்சிகள் கூட, இதுவரை வரவில்லை. பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற பா.ஜ .,வின் யோசனையை, பழனிசாமி ஏற்கவில்லை.

'பிரிந்து சென்றவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்' என, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன் பகிரங்க குரல் எழுப்பியதால், அக்கட்சியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ., கூட்டணியில் முக்கிய கட்சியாக பார்க்கப்பட்ட பா.ம.க.,வும், அப்பா - - மகன் மோதலால் பிளவுபட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த முடியாமல், அமித் ஷாவும், பழனிசாமியும் தவித்து வந்தனர்.

இந்நிலையில், 'வரும் சட்டசபை தேர்தலில், 'தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் இடையேதான் போட்டி' என, பேசி வந்தார். இதனால், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இச்சூழலில், கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.

'இந்த உயிரிழப்புக்கு காவல் துறை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே காரணம்' என, த.வெ.க.,வினர் குற்றஞ்சாட்ட, 'விஜய் மற்றும் அவரது கட்சியினரின் விதிகளை மதிக்காமல் நடந்ததே காரணம்' என, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, பா.ஜ., தலைமை காய் நகர்த்தி வருகிறது. இதையொட்டி, விஜயிடம் தொலைபேசியில் பேசிய அமித் ஷா, கரூர் துயர சம்பவம் குறித்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கரூரில் நடந்தவை குறித்து விஜயிடம் கேட்டறிந்த அவர், 'இப்பிரச்னையில் பா.ஜ.,வும், மத்திய அரசும் உங்கள் பக்கம் நிற்கும். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதே, இருதரப்பின் நோக்கம்.

'ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வுக்கு சாதகமாகும் சூழல் உள்ளது. அதனால், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு வருவது குறித்து யோசியுங்கள்' என கூறியுள்ளார்.

இதற்கு, விஜய் சாதகமான பதிலை கூறாவிட்டாலும், மறுப்பு தெரிவிக்கவில்லை என, பா.ஜ., தரப்பில் கூறுகின்றனர்.

கரூர் துயர சம்பவத்தை வைத்து தன்னையும், த.வெ.க.,வையும் அரசியலில் இருந்து அகற்ற, தி.மு.க., முயற்சிப்பதாக நினைக்கும் விஜய், கோபத்தில் மாற்றி யோசிக்கக்கூடும். இதனால், அவர் கூட்டணிக்கு வருவார் என, அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் நம்பிக்கையோடு உள்ளனர்.

-- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us