Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., வியூகம்! தொண்டர்களை தயார்படுத்தும் பணியில் தீவிரம்

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., வியூகம்! தொண்டர்களை தயார்படுத்தும் பணியில் தீவிரம்

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., வியூகம்! தொண்டர்களை தயார்படுத்தும் பணியில் தீவிரம்

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., வியூகம்! தொண்டர்களை தயார்படுத்தும் பணியில் தீவிரம்

ADDED : ஜூன் 11, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., வியூகம் அமைத்துதேர்தல் பணியை துவங்கியுள்ளது, தொண்டர்களை குஷியடையச் செய்துள்ளது.

நாட்டை ஆளும் பா.ஜ., தென் மாநிலங்களிலும் வெற்றி வாகையை சூடிட வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, ஓராண்டிற்கு முன்பாகவே தேர்தல் பணியை துவங்கிவிட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளதோடு, கூட்டணியை பலப்படுத்த மேலும் பல கட்சிகளை இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் கூட்டணி அதிகாரத்தில் இருந்தாலும், சுழற்சி முறையில் அமைச்சர் பதவி, வாரிய தலைவர் பதவி உள்ளிட்ட சில, பல காரணங்களால் பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளிடையே உரசல் நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது. இதனை உறுதி செய்வது போல், முதல்வர் ரங்கசாமி, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என, அவ்வப்போது கூறி வருகிறார்.

இதனால், தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் கூட்டணியை உறுதி செய்திட பா.ஜ., தலைமை நடவடிக்கை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், எதிர் வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திட தனி வியூகம் அமைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

அதனையொட்டி, பா.ஜ., பிரதமர் மோடி, கடந்த 11 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை தொண்டர்கள் மூலமாக மக்களிடையே கொண்டு செல்வதற்கான பிரசார பணியை துவங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் செல்வகணபதி, மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அசோக்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகிகளின் பேச்சுகள், கட்சி தலைமையின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்தது.

கூட்டத்தில், மாநில தலைவர் செல்வகணபதி பேசியதாவது:

புதுச்சேரியில் வரும் 2026ல் நமது ஆட்சிதான் என்ற கனவு இருக்க வேண்டும். தற்போது 6 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதனை வரும் தேர்தலில் 15ஆக உயர்த்துவோம். அதற்கான சாதனைகளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் செய்து கொண்டுள்ளனர். அரசு மிக நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் பொதுமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அப்பொழுது தான் நமது கனவு நனவாகும். விழிப்புடன் இருங்கள், 2026 நமக்கானது. பா.ஜ.,விற்கு சொந்தமானதாக தான் இருக்கும். நமது எண்ணிக்கை உயர வேணடும். நாம் உயர வேண்டும். அப்போதுதான், புதுச்சேரி மாநிலம் வளர்ந்து கொண்டே இருக்கும்' என்றார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'அரசின் நலத்திட்டங்கள் அது பணமானாலும் சரி, அரிசி ஆனாலும் சரி. அனைத்தும் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற கொள்கை முடிவை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். அப்படி தான், ரேஷன் அரசிக்கு பதில் பணம் தருவதை மாற்றி மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி எவ்வித ஆட்சேபனையின்றி, அரிசி வழங்க அனுமதி வழங்கினார். இது மத்திய அரசின் சாதனை. இதனை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்' என்றார்.

கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., பேசுகையில், 'கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காங்., ஆட்சியில் முதியோர் பென்ஷன் ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை. புதிதாக எவருக்கும் பென்ஷன் வழங்கவில்லை. ஆனால், நமது ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்ஷன் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. பென்ஷன் தொகை ரூ.500 உயர்த்தினோம். தற்போது ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஆகும்.

இந்த அரசு புதுச்சேரியில் தனிப்பட்ட முறையில் நலத்திட்டங்களை வழங்குவது போன்று ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். இந்த முறை நாம் 6 எம்.எல்.ஏ.,க்கள் வந்துள்ளோம். என்.ஆர்.காங்., 10 எம்.எல்.ஏ., வந்துள்ளனர். நாம் செய்வது மக்களுக்கும் தெரியவில்லை. கட்சிக்காரர்களுக்கு கூட தெரியவில்லை. வரும் 2026ல் புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி வந்தால் மட்டுமே நாம் அனைத்தும் செய்ய முடியும். அதற்கேற்ப நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும், நாம் செய்துள்ள பல்வேறு வேலைகள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்' என்றார்.

இவர்களின் பேச்சு, வரும் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தெரியாமல் குழப்பத்தில் இருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us