ADDED : ஜன 28, 2024 04:45 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் ஓட்டலில் தயிர் சாதம் சாப்பிட்டு திரும்பிய டிரைவர் நெஞ்சுவலி ஏற்பட்டு, சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி, பெரியப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; இவரது மனைவி ஈஸ்வரி. முத்தியால்பேட்டை சோலை நகர், கண்ணதாசன் வீதியில் தங்கியிருந்தனர்.
ராமகிருஷ்ணன் எல்லப்பிள்ளைச்சாவடி, விக்டோரியா நகரில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் டிரைவாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணிக்கு சென்ற ராமகிருஷ்ணன், மதியம் ஓட்டலுக்கு சென்று தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு வருவதாக சக ஊழியரிடம் கூறிவிட்டு சென்றார். சாப்பிட்டு முடித்து மதியம் 1:50 மணிக்கு ஆய்வகம் திரும்பினார். அடுத்த சில நிமிடத்தில் நெஞ்சு மற்றும் வயிறு வலியால் துடித்தார். ஆய்வகத்தில் உள்ள ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
எனது கணவர் வேலை செய்யும் தனியார் ஆய்வக நபர்கள் மீது சந்தேகம் உள்ளது என ராமக்கிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சந்தேக பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.