ADDED : மார் 19, 2026 04:40 AM

புதுச்சேரி: பாகூர் போலீசார், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாகூர் அடுத்த சேலியமேடு வாணிதாசனார் வீதியை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன், 32. இவர், மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. சில மாதங்களுக்கு முன், அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த வந்த இவரை பாகூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது, தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், இவர் வெளியே வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகும் எனவும், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, தெற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டாராமன் அறிவுறுத்தினர்.
அதன்பேரில், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மேற்பாவையில், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அதற்கான கோப்புகளை தயார் செய்து, புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கனுக்கு அனுப்பி வைத்தனர். கோப்புகளை பார்வையிட்ட அவர், ரவுடி பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், காலாப்பட்டு சிறையில் இருக்கும் பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை, சிறை அதிகாரி மூலம் வழங்கினார்.





