Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவிலுக்கு ரூ.5 லட்சத்தில் தஞ்சாவூர் ஓவியம்

மணக்குள விநாயகர் கோவிலுக்கு ரூ.5 லட்சத்தில் தஞ்சாவூர் ஓவியம்

மணக்குள விநாயகர் கோவிலுக்கு ரூ.5 லட்சத்தில் தஞ்சாவூர் ஓவியம்

மணக்குள விநாயகர் கோவிலுக்கு ரூ.5 லட்சத்தில் தஞ்சாவூர் ஓவியம்

ADDED : மே 17, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, அன்மையில் தஞ்சாவூர் ஓவிய பாணியில் அருள்பாலிக்கும் மணக்குள விநாயகர் படம் ஒன்றும் கோவில் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ரூ.5 லட்சம் மதிப்புள்ள இந்த மணக்குள விநாயகர் படத்தினை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் திறந்து வைத்து வழிபட்டனர். கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் வரவேற்றார்.

இந்த தஞ்சாவூர் ஓவிய பாணியிலான மணக்குள விநாயகர் படத்தினை வரைந்து கோவிலுக்கு பரிசாக அளித்தது சென்னையை சேர்ந்த தஞ்சாவூர் ஓவியர் பிரியா. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை சங்கல்பா தஞ்சாவூர் ஓவிய கூடத்தினை நடத்தி வருகின்றார்.

தஞ்சாவூர் ஓவியர் பிரியா கூறியதாவது:

ஒவ்வொரு கோவில்களிலும் உள்ள தெய்வங்களை தஞ்சாவூர் பாணியில் வரைந்து அக்கோவிலுக்கு தர வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். முதல் கோவிலாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் மூலவரை தஞ்சாவூர் ஓவியம் பாணியில் வரைந்து கொடுத்துள்ளேன்.

அடுத்தடுத்து பல கோவில்களுக்கு தஞ்சாவூர் பாணியிலான தெய்வீக ஓவியங்கள் எனது கையால் வழங்க உள்ளேன். தஞ்சாவூர் ஓவியத்தை இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஓவியம் கோவில்களில் இருந்தால் அழியாமல் காலம் கடந்து இருக்கும். தஞ்சாவூர் ஓவியத்தை இளைய தலை முறையினரும் தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாகவே கோவில்களை தேர்வு செய்து வழங்க முடிவு செய்துள்ளேன்.

தஞ்சாவூர் ஓவியம் 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதை பலகை படம் என்றுதான் கூறுவார்கள். ஆனால் தஞ்சை சரபோஜி மன்னரால் ஊக்கவிக்கப்பட்டதால், தஞ்சாவூர் ஓவியம் என புகழ்பெற்றது.

தங்கம், தங்க இலை, பட்டை தீட்டப்பட்ட கற்கள் என விலை உயர்ந்த பொருட்களை கொண்டு தான் தஞ்சாவூர் ஓவியம் வரையப்பட்டதால் ஒரு காலத்தில் அதனுடைய மதிப்பும் உலகம் முழுவதும் கோலோச்சி இருந்தது. அக்காலத்தில் பெரும்பாலான இறைவன் படத்தை தஞ்சாவூர் ஓவியமாக வரைந்தனர். ஆனால் இப்போது அனைத்தும் மாறிவிட்டது.

காலத்துகேற்ப விலங்குகள், நடன காட்சிகள், இயற்கை காட்சிகள், கலாசார பதிவுகள் என பல நிலைகளில் தஞ்சாவூர் ஓவியங்களில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் ஓவியத்திற்கு இன்றைக்கும் மவுசு குறையவில்லை. பல மார்டன் கலைகள் வந்தாலும், தஞ்சாவூர் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. நமது பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியத்தை நாம் தான் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us