Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்

பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்

பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்

பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்

Latest Tamil News
இந்துார்: பெண்கள் உலக கோப்பை லீக் போட்டியில் பிரிட்ஸ் சதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இந்துாரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மரிஜானே காப் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் சுசீ பேட்ஸ் (0) அவுட்டானார். அமெலியா கெர் (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஜார்ஜியா (31), கேப்டன் சோபி டெவின் ஜோடி ஆறுதல் தந்தது.

அடுத்து வந்த புரூக் ஹாலிடேவுடன் இணைந்த டெவின் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது மிலாபா பந்தில் ஹாலிடே (45) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய டெவின், 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் 231 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் மிலாபா 4 விக்கெட் கைப்பற்றினார்.

பிரிட்ஸ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் (14) ஏமாற்றினார். பின் இணைந்த தஸ்னிம் பிரிட்ஸ், சுனே லுாஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. டெவின், லியா பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய பிரிட்ஸ், ஈடன் கார்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். சுனே லுாஸ் அரைசதம் கடந்தார். இவர்களை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கனைகள் திணறினர்.

அபாரமாக ஆடிய பிரிட்ஸ், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்த போது லியா பந்தில் பிரிட்ஸ் (101) போல்டானார். அமெலியா கெர் பந்தில் மரிஜானே காப் (14), அன்னேக் போஷ் (0) அவுட்டாகினர். ஈடன் கார்சன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சுனே லுாஸ் வெற்றியை உறுதி செய்தார்.

தென் ஆப்ரிக்க அணி 40.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 232 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுனே லுாஸ் (81), சினாலோ ஜப்தா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

44 ரன்னுக்கு 7 விக்.,

நியூசிலாந்து அணி 38 ஓவரின் முடிவில் 187/3 ரன் எடுத்திருந்தது. அடுத்த 44 ரன்னுக்கு, 7 விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து (47.5 ஓவர்) 231 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

41 இன்னிங்ஸ்

ஒருநாள் போட்டி அரங்கில் குறைந்த இன்னிங்சில் 7வது சதம் விளாசிய வீராங்கனையானார் தஸ்னிம் பிரிட்ஸ். இவர், 41 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மேக் லானிங், 44 இன்னிங்சில் தனது 7வது சதத்தை பதிவு செய்திருந்தார்.

* ஒரே ஆண்டில் 5 சதம் விளாசிய முதல் வீராங்கனையானார் பிரிட்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us