ADDED : பிப் 11, 2024 06:45 PM

லுாசைல்: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் கத்தார் அணி மீண்டும் சாம்பியன் ஆனது. பைனலில் 3-1 என ஜோர்டானை வென்றது.
கத்தாரில் ஆசிய கோப்பை கால்பந்து 18வது சீசன் நடந்தது. லுாசைல் நகரில் நடந்த பைனலில் கத்தார், ஜோர்டான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கத்தார் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் அக்ரம் அபிப் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜோர்டான் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் கத்தார் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஜோர்டான் அணிக்கு 67வது நிமிடத்தில் அல்-நைமத் ஒரு கோல் அடித்தார். பின் 73வது, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் கத்தாரின் அக்ரம் அபிப் 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். ஆட்டநேர முடிவில் கத்தார் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2019, 2023) கோப்பை வென்றது.
இதன்மூலம் கத்தார் அணி அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான வரிசையில் 4வது இடத்தை தென் கொரியாவுடன் (1956, 1960) பகிர்ந்து கொண்டது. முதல் மூன்று இடங்களில் ஜப்பான் (1992, 2000, 2004, 2011), சவுதி அரேபியா (1984, 1988, 1996), ஈரான் (1968, 1972, 1976) அணிகள் உள்ளன.