Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு வேளாண் துறையின் உதவி எதிர்பார்ப்பு

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு வேளாண் துறையின் உதவி எதிர்பார்ப்பு

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு வேளாண் துறையின் உதவி எதிர்பார்ப்பு

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு வேளாண் துறையின் உதவி எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 27, 2024 07:08 AM


Google News
சென்னை : மக்காச்சோள பயிர்களை தாக்கும் படைப்புழுக்கள் ஒழிப்பிற்கு, வேளாண் துறையின் உதவியை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு மாற்றாக மக்காச்சோளம் சாகுபடி செய்வதில், விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மக்காச்சோள பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதும், குறைந்த காலத்தில் அறுவடை செய்வதும் இதற்கு காரணம்.

மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சாகுபடி பரப்பு, உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகளில், வேளாண்துறையும் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, 18 மாவட்டங்களில், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்காச்சோள சாகுபடி சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டால், சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.

அதேநேரத்தில், மக்காச்சோள பயிர்களுக்கு படைப்புழுக்கள் பெரும் சவாலாக உள்ளன. விதைப்பு முதல் அறுவடை வரை மூன்று கட்டங்களில் மக்காச்சோள பயிர்களை, படைப்புழுக்கள் தாக்கி அழித்து வருகின்றன.

இதனால், படைப்புழு கட்டுப்பாட்டிற்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை, விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.

சாகுபடி செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில், 48 கோடி ரூபாய் செலவிட்டு, படைப்புழுக்கள் ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, கண்டுகொள்ளாமல் விட்டதால், படைப்புழுக்கள் உற்பத்தி பெருகியுள்ளது.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டத்தின் கீழ், அவற்றை ஒழிப்பதற்கு தேவையான உதவிகளை வேளாண்துறையினர் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:

கடந்த ஏழு ஆண்டுகளாக, படைப்புழுக்கள் தாக்குதல் அதிகரித்து உள்ளது. படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு, சரியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் குறை கேட்பு கூட்டங்களிலும், பட்ஜெட் தொடர்பான ஆலோசனையிலும் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மருந்து தெளிக்கும் போது, பல படைப்புழுக்கள் இறக்கின்றன. மற்றவை தப்பித்து பயிர்களை காலி செய்து விடுகின்றன. இதனால், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பல நேரங்களில் லாபம் கிடைப்பதில்லை.

அதேநேரத்தில், முதலுக்கும் பாதிப்பில்லை என்ற நிலை உள்ளது. படைப்புழுக்கள் தாக்குதல் இல்லாமல் உரிய மகசூலை எடுத்தால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

எனவே, இதை வேளாண் துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us