/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லத்துார் ஒன்றிய குழு தலைவர் துணை தலைவர் பதவியேற்பு லத்துார் ஒன்றிய குழு தலைவர் துணை தலைவர் பதவியேற்பு
லத்துார் ஒன்றிய குழு தலைவர் துணை தலைவர் பதவியேற்பு
லத்துார் ஒன்றிய குழு தலைவர் துணை தலைவர் பதவியேற்பு
லத்துார் ஒன்றிய குழு தலைவர் துணை தலைவர் பதவியேற்பு
ADDED : ஜூலை 12, 2024 10:06 PM

பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்தில் 15 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர். 2021ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., சார்பில் 10 கவுன்சிலர்கள், அ.தி.மு.க., சார்பில் ஐந்து கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
சுபலட்சுமி ஒன்றிய குழு தலைவராகவும், கிருஷ்ணவேணி துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த அக்., 13ம் தேதி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
பின், லத்துார் ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி காலியாக உள்ளது என, அரசாணை வெளியிடப்பட்டது,
காலியான பதவிகளுக்கான தேர்தல் கடந்த மார்ச் 6ம் தேதி நடந்தது.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்ததால், தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் 18ம் தேதி ஒன்றியக குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக, அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியான, செங்கல்பட்டு மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார் கடிதம் அனுப்பினார்.
இதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, 'வழக்கு முடியும் வரை தற்போது உள்ள நிலையே தொடரும்' என தெரிவித்திருந்தார்.
எனவே, நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்கும் விதமாக, தேர்தல் முடிவு அறிவிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக, 17ம் தேதி இரவு அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
கடந்த 1ம் தேதி வழக்கு விசாரணையில், 12 கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மார்ச் மாதம் நடந்த தேர்தலின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது, தலைவர் பதவிக்கு 6வது வார்டு கவுன்சிலர் சாந்தி மனு தாக்கல் செய்தார்.
துணை தலைவர் பதவிக்கு 10வது வார்டு கவுன்சிலர் சித்ரா மனுதாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு இருவரும் பதவியேற்றனர்.