/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொக்கிலமேடு ஐஸ் தயாரிப்பு தொழிற்கூடம் ஆறு ஆண்டுகளாக பயன்பாடின்றி முடக்கம் கொக்கிலமேடு ஐஸ் தயாரிப்பு தொழிற்கூடம் ஆறு ஆண்டுகளாக பயன்பாடின்றி முடக்கம்
கொக்கிலமேடு ஐஸ் தயாரிப்பு தொழிற்கூடம் ஆறு ஆண்டுகளாக பயன்பாடின்றி முடக்கம்
கொக்கிலமேடு ஐஸ் தயாரிப்பு தொழிற்கூடம் ஆறு ஆண்டுகளாக பயன்பாடின்றி முடக்கம்
கொக்கிலமேடு ஐஸ் தயாரிப்பு தொழிற்கூடம் ஆறு ஆண்டுகளாக பயன்பாடின்றி முடக்கம்
ADDED : ஜூலை 27, 2024 01:20 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில், மீனவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மற்றும் சுற்றுப்புற மீனவர்கள், கடலில் பிடித்த மீன்களை, விற்பனைக்கு முன் கெடாமல் பாதுகாக்க தேவையான ஐஸ் கட்டிகள் வாங்க சிரமப்பட்டனர்.
இங்கேயே ஐஸ் கட்டி தயாரிப்பு தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2015ல், ஐஸ் தயாரிப்பு தொழிற்கூடத்திற்கான கட்டடம், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
அணுமின் நிலைய நிர்வாகத்தினர், தன்னார்வ நிறுவனம் வாயிலாக, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், தினசரி 7.5 டன் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் இயந்திரம் அமைத்தனர்.
கொக்கிலமேடு, மாமல்லபுரம், பட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் தேவைக்காக, ஐஸ் கட்டிகள் தயாரிக்க, தன்னார்வ நிறுவனமே ஏற்பாடு செய்தது.
அதை நிர்வகிக்க நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு, தலைவராக ஊராட்சித் தலைவர், உறுப்பினர்களாக அணுமின் நிலையம் மற்றும் தன்னார்வ நிறுவனம் சார்பில், தலா ஒரு பிரதிநிதி, மீனவர்கள் 7 பேர் நியமிக்கப்பட்டனர்.
துவக்கத்தில், மாதத்திற்கு சராசரியாக 25,000 ரூபாய் வீதம் வருமானம் கிடைத்தது. ஆனால், மின் கட்டணமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவானதால், நட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், கடந்த 2016ல், 3,500 ரூபாய் மாத குத்தகை அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவரிடமே, மூன்றாண்டுகளுக்கு ஒப்படைத்தது. ஒரே ஒரு மாதம் இயக்கி, 35,000 ரூபாய் மட்டும் வருமானம் கிடைத்த நிலையில், மின் கட்டணம், 1.53 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.
மின் கட்டணத்தை செலுத்தாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால், ஐஸ் தயாரிப்பு முடங்கியது. துவக்கத்தில், தொழிற்சாலைக்கான அனுமதி பெற்று, அதற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின் கட்டண செலவு அதிகரித்த நிலையில், சிறு தொழில்கள் வகைப்பாட்டில் மின் இணைப்பு வழங்குவதன் அவசியம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அனுமதியின் அடிப்படையில், கடந்த 2017ல், மின் இணைப்பு வகை மாற்றப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டது.
மீனவர்களிடம் நிலவும் உள்ளூர், வெளியூர் கவுரவ பிரச்னைகள் காரணமாக, முழுதிறனில் ஐஸ் கட்டிகள் தயாரித்தும், உள்ளூர் மீனவர்களுக்கு மட்டுமே விற்கப்பட்டது.
பிற பகுதி மீனவர்களுக்கு விற்க மறுத்து, 75 சதவீதம் உற்பத்தி வீணடிக்கப்பட்டது. அதனால், தொடர்ந்து நட்டமடைந்ததால், மீண்டும் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. கடந்த 2018 முதல் செயல்படாமல் முடங்கியுள்ளது. ஐஸ் கட்டி தயாரிப்பு இயந்திரங்கள் துருப்பிடித்து சீரழிந்துள்ளன.
ஊராட்சி பிரதிநிதிகள், மீனவ சபையினரின் சுயநலம் உள்ளிட்ட காரணங்களால், இதுவரை 55 லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. அணுமின் நிலைய சமூக பொறுப்பு நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தினர், அதன் தற்போதைய செயல்படும் நிலையை ஆய்வு செய்ய வேண்டும். இயங்கக்கூடிய நிலையிலிருந்தால், மீனவர்கள் தவிர்த்து, வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியாரிடம் ஒப்படைத்து செயல்படுத்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.