Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை ஒளிரும் தோட்டம் திட்டம் 10 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

மாமல்லை ஒளிரும் தோட்டம் திட்டம் 10 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

மாமல்லை ஒளிரும் தோட்டம் திட்டம் 10 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

மாமல்லை ஒளிரும் தோட்டம் திட்டம் 10 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

ADDED : ஜூலை 24, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் சிற்பங்களை ரசிப்பது தவிர்த்து, சுற்றுலா பயணியருக்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. சிற்பங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

அவற்றை காணும் சுற்றுலா பயணியர் விரைவில் களைப்படைகின்றனர். இளைப்பாறி ஓய்வெடுக்க, இயற்கைச்சூழல் பூங்கா அமைய வேண்டிய அவசியம் குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தொல்லியல் துறை அலுவலகம் அருகில், கடந்த 2009ல் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மரகத பூங்கா அமைத்தது.

இதில், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென கற்களில் மேடை, பார்வையாளர் மாடம், மலர் செடிகள், புல்வெளி, வட்ட வடிவ ஓய்விருக்கை, நடைபாதை, விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.

துவக்கத்தில் சுற்றுலாத் துறையினர், வார இறுதியில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். நாளடைவில் புதர் சூழ்ந்து சீரழிந்தது.

சுற்றுலாத் துறையினர், 2018ல் புதரை அகற்றி மீண்டும் வார இறுதி கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. நிகழ்வின்போது பயணியரை அனுமதித்து, பின் மூடப்பட்டது.

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பின்போது, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், பேரூராட்சி நிர்வாகம் மேம்படுத்தியது. பராமரிப்பு செலவு கருதி, பின் கைவிடப்பட்டதால், மீண்டும் வீணானது.

கலங்கரை விளக்க பின்னணியுடன் உள்ள பூங்கா வளாகத்தை மேம்படுத்தி பயன்படுத்த, ஆர்வலர்கள் வலியுறுத்தியது குறித்து, நம் நாளிதழில் வெளியிடப்பட்டது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தனியார் நிறுவன பங்களிப்பில் செயல்படுத்த முடிவெடுத்தது.

மும்பையை சேர்ந்த 'சன்வின்' நிறுவனம் வடிவமைத்த ஒளிரும் தோட்டம் திட்டத்தை தேர்வுசெய்து, செயல்படுத்தவும் அறிவித்தது.

அதற்கு, நிறுவனம் 8 கோடி ரூபாய் மதிப்பு நிர்ணயித்தது. சுற்றுலா நிர்வாகம் பரிசீலித்து, 2.48 ஏக்கர் பூங்கா வளாகத்தை அளித்தது.

தனியார் நிறுவனமே, சொந்த நிதியில் செயல்படுத்தி, சுற்றுலா நிர்வாகம் அனுமதிக்கும் காலம் வரை பயன்படுத்தி, நிர்வாகத்திடமே ஒப்படைக்கும். வருவாயை, நிர்வாகம், நிறுவனம் இரண்டும் பகிர்ந்து கொள்ளும்.

கடந்த ஆண்டு செப்., 1ம் தேதி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பூமி பூஜை செய்து பணிகளை துவக்கினர்.

அதே ஆண்டு டிச.,க்குள் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கும் துவக்கப்படும் என, சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார். பத்து மாதங்கள் கடந்தும், தற்போது வரை கட்டமைப்பு பணிகளை துவக்கவில்லை.

இது குறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது:

ஒளிரும் தோட்டம் திட்டத்திற்காக, மும்பை தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் தடை பட்டியலில் அந்நிறுவனம் உள்ளதாக சர்ச்சை ஏற்பட்டது.

அதன் உண்மை தன்மை பற்றி அறிந்தபின் அனுமதிக்க முடிவெடுத்ததால், பணிகளை துவக்குவதில் தாமதமானது.

ஆனால், நிறுவனத்தின் மீது அத்தகைய தடை ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால், மேற்கொண்டு திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் தோட்ட கட்டமைப்புகளை, நிறுவனம் வேறிடத்தில் உருவாக்கி, மாமல்லபுரத்தில் ஒருங்கிணைத்து நிறுவும். அப்பணிகள் முடிந்து சில மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

 நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் ஒளிரும் தோட்டத்தில், மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், மலர் செடிகள், மரங்கள் உள்ளிட்டவை, எல்.இ.டி., வண்ண விளக்குகளில் பிரகாசிக்கும். நீர் பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவை, பல வண்ணங்களில் ஒளிர்ந்து மிளிரும் 5டி சினிமா கண்டு ரசிக்கலாம் ரசனையான சூழலில் செல்பி எடுக்கலாம் பலவகையான உணவுகளை ருசிக்கலாம் ஒளி மிளிரும் பாதையில் உலவலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us