Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திட்ட பணிகளை வேகமாக முடிப்பதில் ஆர்வமில்லை:அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

திட்ட பணிகளை வேகமாக முடிப்பதில் ஆர்வமில்லை:அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

திட்ட பணிகளை வேகமாக முடிப்பதில் ஆர்வமில்லை:அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

திட்ட பணிகளை வேகமாக முடிப்பதில் ஆர்வமில்லை:அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 15, 2024 10:55 PM


Google News
சோழிங்கநல்லுார்:இ.சி.ஆர்., -- ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், சாலை, வடிகால், குடிநீர், கழிவுநீர், மின் கேபிள், எரிவாயு குழாய் பதிப்பு என, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பணி நடக்கிறது.

தேர்தல் நடத்தை விதியால், பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால், திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஆனது.

பணிகளை வேகப்படுத்த, அனைத்து துறைகளின் கலந்தாய்வு கூட்டம், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் மதியழகன் முன்னிலையில், தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், பா.ஜ.,வின் லியோசுந்தரம், தி.மு.க,வின் ஏகாம்பரம், அ.தி.மு.க.,வின் கோவிந்தசாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

துரைப்பாக்கத்தில், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் முறையாக நடக்கவில்லை. செம்மஞ்சேரி பழைய வடிகால் அகற்றாமல், சாலையில் புதிய வடிகால் அமைத்ததால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து சாலை சுருங்கும். காரப்பாக்கத்தில், குடிநீர் இணைப்பு முறையாக வழங்கவில்லை.

உத்தண்டியில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளை வரைபடம் அடிப்படையில் அமைக்காமல், கிழக்கு கடற்கரை சாலையை தாறுமாறாக துண்டித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். ஒக்கியம் துரைப்பாக்கத்தில் வடிகால் பணியில் குளறுபடி உள்ளது.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

இதற்கு, ஒவ்வொரு துறை அதிகாரிகளும் பதில் அளித்தனர். இதில், கவுன்சிலர்கள் திருப்தி அடையாமல், அதிருப்தியாக பேசினர்.

தொடர்ந்து எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பேசியதாவது:

திட்ட பணிகளை வேகமாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு துறை திட்ட பணி துவங்கினால், இதர துறைகளின் ஒத்துழைப்பு தேவை.

ஆனால், எதிரி நாடுகள் போல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால், திட்டத்திற்கு ஒதுக்கிய பணம் வீணடிக்கப்படும். பல புதிய வடிகால்களின் பயன், பருவமழைக்கு தான் தெரியும்.

துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், இந்த கூட்டம் நடத்த தேவை ஏற்பட்டிருக்காது. பணிக்கு இடையூறு ஏற்பட்டால் என்னிடம் கூறுங்கள். திட்ட பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகள் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் பணி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us